தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

சிறுதொழில் துறைக்குத் தேவை ஊக்கமும் ஆக்கமும் - எம்எஸ்எம்இ

வாழ்க்கைக்கும் மரணத்திற்குமான போராட்டத்தில் தங்களின் இருப்பைத் தக்க வைப்பதற்கான பெரியதொரு முயற்சியில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருந்தன என்பதை ரிசர்வ் வங்கியும் தெளிவாகச் சொல்லியிருந்தது. பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில் கூட அவற்றிற்கு எந்தவித ஆதரவும் கிட்டவில்லை.

சிறுதொழில் துறை
சிறுதொழில் துறை

By

Published : Mar 5, 2021, 7:40 PM IST

கடுமையான கடன் பிரச்னை இந்தியாவைச் சிக்கலில் தள்ளிவிடும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் சிற்பியான அவரது கருத்துக்கள் மிகவும் பொருத்தமானவை. கடன் சிக்கலால் சிறிய, நடுத்தர தொழில்கள் மூழ்கிவிடும் அபாயம் இருக்கிறது என்ற அவரது எச்சரிக்கையைப் புறந்தள்ள முடியாது; கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

கோவிட்-19 என்னும் கரோனா பெருந்தொற்று பரவலுக்கு முன்பாக கடுமையான சோதனைக் காலத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள், தவிர்க்க முடியாத சூழல்களில் கொண்டு வரப்பட்ட ஊரடங்கினால் ஒரு மரண அடியைச் சந்தித்தன.

வாழ்க்கைக்கும் மரணத்திற்குமான போராட்டத்தில் தங்களின் இருப்பைத் தக்க வைப்பதற்கான பெரியதொரு முயற்சியில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருந்தன என்பதை ரிசர்வ் வங்கியும் தெளிவாகச் சொல்லியிருந்தது. பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில் கூட அவற்றிற்கு எந்தவித ஆதரவும் கிட்டவில்லை.

மத்திய அரசின் சலுகைகள் அடங்கிய திட்டம் சிறுதொழில் நிறுவனங்களுக்கு மறுவாழ்வு கொடுக்கத் தவறிவிட்டது என்று கடன் மதிப்பீட்டு முகமையான மூடிஸ் என்ற நிறுவனம் ஆணித்தரமான கருத்தைச் சொல்லி இருக்கிறது. இதன்மூலம் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் எத்தகையதோர் இன்னலில் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

சிறு தொழில்களுக்கு ரூபாய் 45 லட்சம் கோடி உதவி தேவைப் படுகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் தேவைப்பட்ட அந்த மொத்த உதவிப் பணத்தில் 18 சதவீதத்திற்குக் குறைவாகவே வங்கிகளால் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்குக் கொடுக்க முடிகிறது. குறைவான முதலீட்டில் இயங்கிக் கொண்டிருந்தாலும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கு வகிக்கின்றன. அவை 11 கோடி பேர்களுக்கு வேலைவாய்ப்புத் தருவதோடு நாட்டில் பல்வேறு விதமான பொருட்களை உற்பத்தியும் செய்கின்றன.

சோதனையான காலக்கட்டத்தில் விழிபிதுங்கி சிரந்தாழ்த்தி கரங்கூப்பி உதவி வேண்டி இறைஞ்சி அலைந்து திரியும் நிலைக்குக் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்தச் சிறுதொழில் துறைக்கு உதவுவது தேசிய நலனுக்குத்தான் என்று புரிந்துகொண்டு உடனடியாக மீளுருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் தரவுகள்படி, தேசத்தில் 6.3 கோடி குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 30 விழுக்காட்டை அவைதான் வழங்குகின்றன. அண்டைத் தேசமான சீனாவில், கிட்டத்தட்ட 3.8 கோடி குறு, சிறு தொழில்கள் அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்தைக் கொடுக்கின்றன. மொத்த வேலை வாய்ப்புகளில் சுமார் 80 சதவீதம் இந்தத் துறையில்தான் கிடைக்கின்றன.

ஒவ்வொரு நாளும் சீனாவில் 16,000-லிருந்து 18,000 வரை புதிய நிறுவனங்கள் பிறக்கின்றன என்று ஒரு மதிப்பீடு சொல்கிறது. அந்த மாதிரியான ஊக்கமும் ஆக்கமும் தருகின்ற சூழல் இல்லாமல் போனதினால் இந்தியாவின் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் ஜீவிதத்திற்காக முடிவில்லாத சோதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

சீனா மட்டுமல்ல, அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் கூட குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு தொழில்நுட்பம், நிதி ஆகிய உதவிகளைக் கொடுத்து அவற்றை ஊக்குவிக்கின்றன. சிறுதொழிற்துறை பொருளாதாரத்தின் உயிர்மூச்சு என்பதினால் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றன அந்த நாடுகள்.

கனடா, தென்னாஃப்ரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளும் சிறுதொழில்களின் நன்மைக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஜெர்மனியின் சிறந்த பணிவாய்ப்பு நிலைக்குக் காரணம், அந்நாட்டில் மிட்டில்ஸ்டாண்ட் என்று அழைக்கப்படும் சிறு, நடுத்தரத் தொழில்துறைக்கு அந்நாட்டு அரசாங்கம் கொடுக்கும் ஊக்கமும், ஆக்கமும்தான்.

நம் நாட்டில் சிறுதொழில்களை மேம்படுத்துவதற்காக, பல்வேறு குழுக்களின் அறிக்கைகள் பலவிதமான பரிந்துரைகளை வழங்கியிருக்கின்றன. ஆனாலும், இந்தத் துறைக்கு ஒழுங்கான நிறுவனரீதியிலான ஆதரவு இல்லை. உலகத் தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்ட சிறுதொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க பல வழிமுறைகளை கான்ஃபெடரேஷன் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் (சிஐஐ) ஏற்கனவே கூறியிருக்கிறது.

சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு எல்லா விதமான கட்டுப்பாடுகளிலிருந்தும், விதிமுறைகளிலிருந்தும் மூன்று வருட காலத்திற்கு ஒரு விதிவிலக்கை அளிக்கும்படி அது சொல்லியிருக்கிறது. சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ’59 நிமிடங்களில்’ கடன் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நிஜத்தில் கடன் தொகையைப் பெறுவதற்கு அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட நிதி ஊக்க அறிவிப்புகளில் நேர்மையான நிஜமான உணர்வு இல்லை.

தகுதிக்கேற்ற கடன் உதவி, தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சந்தையோடு தொடர்பு ஆகியவை சோதனையான இந்தக் காலக்கட்டத்தில் சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அரசு செய்ய வேண்டிய அதிமுக்கியமான உபகாரங்களாகும்.

ABOUT THE AUTHOR

...view details