சிறிய அளவிலான முதலீட்டுடன் நடத்தப்படும் நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், உண்மையில் அவை நாட்டில் 12 கோடி வேலைவாய்ப்புகளை வழங்கும் சக்தி பெற்றவை. நாட்டின் பொருளாதார வீழ்ச்சி சிறு நிறுவனங்களை ஏற்கனவே முடக்கிவிட்டது. கரோனா வைரஸ் அந்த முடக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
பொதுமுடக்கம் காரணமாக வணிக பரிவர்த்தனைகள் குறைந்ததால் பாதிக்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மத்திய அரசின் தற்சார்பு பொருளாதாரத்திற்கான நிதி அளிப்பு திட்டத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தன.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் அளிப்பதற்காக 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், இதன் மூலம், 45 லட்சம் நிறுவனங்கள் பலன்பெறும் என்றும் 3 மாதங்களுக்கு முன்பு அரசு அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்புகளால் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தலைவிதி மாறாது.
ஏனெனில், சிறு நிறுவனங்களின் அவல நிலை எத்தகையது என்பதை ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் தெளிவாக தெரிவிக்கின்றன. சிறு நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதில் உள்ள நெருக்கடி தொடரும் என்று கடந்த ஆண்டே ரிசர்வ் வங்கி தெரிவித்துவிட்டது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பொதுமுடக்கம் காரணமாக வங்கிகளின் கடன் விநியோகம் 17 சதவீதம் சரிந்திருக்கிறது.
நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்குப் போதுமான அளவு நிதி இல்லாதது, பழைய கடன்கள் மீதான வட்டி அதிகரித்திருப்பது, திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறை, மூலப் பொருட்களுக்கான பற்றாக்குறை ஆகியவை சிறு நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, 10 ஆண்டுகளுக்கு பெயரளவிலான குறைந்தபட்ச வட்டி, எப்போது வேண்டுமானாலும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வசதி, தாராளமான கடன் என்னும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறு அறிவித்திருந்தால், பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது மீண்டிருக்கும்.
ஆனால், சிறு நிறுவனங்களுக்கான வட்டி விகிதத்தை 9-14 ஆக வங்கிகள் மாற்றி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடன் வழங்கலில் ஏற்பட்டுள்ள சரிவுக்கான காரணத்தை கண்டறிய ரிசர்வ் வங்கி முயன்று வருகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவில் கைகொடுக்கக் கூடியவை என்பதால், சிறு நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்க வேண்டிய நேரம் இது. ஆனால், அதிக வட்டியை விதிப்பது, கடனை திருப்பிச் செலுத்துவதில் கடுமையான போக்கை கொண்டிருப்பது போன்றவை, அரசு அறிவித்துள்ள நிதி அளிப்பு திட்டத்தின் நேர்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.