நீரானது உலகில் வாழும் அனைத்து வகையான விலங்கினங்களின் வாழ்வாதாரத்துக்கான ஆதாரம் மட்டுமின்றி, பரந்து விரிந்த பசுமைப் பரப்பு மற்றும் நாடுகளின் நீடித்த வளர்ச்சிக்குமானதாகும். உலகம் முழுவதும் 210 கோடி பேர் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் இருக்கும் நிலையில், உலகில் உள்ள 40 சதவிகித மக்கள் தொகையினர் குடிநீர் பற்றாக்குறையில் தவிக்கின்றனர்.
இச்சூழலில் ஐக்கிய நாடுகள் சபை 2018-2028ஆம் ஆண்டுகளுக்கு இடையேயான பத்தாண்டுகளில் குடிநீர் பாதுகாப்புக்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது. இந்தியா, உலகின் மக்கள் தொகையில் 18 சதவிகிதத்தையும், 15 சதவிகித உலக விலங்குகள் தொகையையும் கொண்டிருக்கும். உலகின் நீராதாரங்களில் நான்கு சதவிகிதம் மட்டுமே இந்தியாவில் உள்ளன.
இந்தியா சராசரியாக ஆண்டுக்கு 1,170 மி.மீ மழையைப் பெறுகிறது. ஆனால், பெய்யும் இந்த மழை அளவில் ஐந்தில் ஒரு பகுதியைக் கூட இந்தியா தக்க வைத்துக் கொள்வதில்லை. ஒட்டு மொத்தமாக 60 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிதி அயோக் புள்ளிவிவரத்தின்படி 2030ஆம் ஆண்டில் குடிநீரின் தேவை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்றும், 2050ஆம் ஆண்டில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆறு சதவிகிதமாகக் குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் மத்திய ஜல சக்தித்துறை இந்த ஆண்டின் நவம்பர் மாதம் செயல்படுத்தும் விதமாக ஒரு செயல் திட்டத்தை வகுத்திருக்கிறது. நாட்டில் உள்ள 734 மாவட்டங்களில் ஆறு லட்சம் கிராமங்களில் உள்ள ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்துக்கான ஒட்டு மொத்த தொகையும், குடிநீர் பாதுகாப்புப் பணிகளுக்காக உபயோகிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருக்கிறார்.
256 மாவட்டங்களில் 1,592 பிளாக்குகளில் நிலத்தடி நீர் மட்ட அடுக்கு மிகவும் குறைந்து, அபாய அளவை எட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் இதர மாநிலங்களில் இந்த மாவட்டங்கள் உள்ளன.
மழை நீர் பாதுகாப்பு, நீர் வளங்களை மீட்டெடுத்தல், கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துதல், மரம் நடுதல் உள்ளிட்டவை தொடர்பான பணிகள் படிப்படியாக செயல்படுத்தப்பட வேண்டும். மக்கள் ஒன்றிணைந்து அதிகாரத்தின் ஆளுமை போன்று நகர்ந்தால் சாத்தியமில்லாதது ஒன்றும் இல்லை.
”அசோகப் பேரரசர் குடிநீருக்காக குளங்களை கட்டமைத்தார்” என்று நாம் அனைவரும் சிறுவயதில் படித்திருக்கிறோம்.அது கடந்த காலம். நிகழ்காலமோ அபாயகரமான மாசுபடுத்தும் கழிவுப் பொருள்களுடன், நீர் வளங்களை வேண்டுமென்றே மாசுபடுத்தும் நிகழ்வுகளைக் கொண்டவையாக இருக்கின்றன. நமது சொந்த கைகளைக் கொண்டு மக்களான நாமே நீர் வளங்களை அழிக்கின்றோம்.
நீர் வளங்களுக்கு சொந்தமான நிலங்களை அபகரிக்கின்றோம். இந்தியாவில் 450 ஆறுகள் ஓடுகின்றன. அதில் பாதியளவு தண்ணீர்கூட குடிநீருக்காக உபயோகிக்கக்கூடியதாக இல்லை. அரசாங்கங்கள், நீர் வள ஆதாரங்களில் இனிமேலும் கழிவு நீர் கலப்பதை அனுமதிக்காமல் கடும் நடவடிக்கை எடுக்கவே்ண்டும்.
தோராயமாக 3,600 கோடி லிட்டர் கழிவு நீர், நமது நீர் வள ஆதாரங்களில் கலக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசுகள், தெலங்கானா மாநிலம் போல நீர்வள ஆதாரங்களை போர்கால அடிப்படையில் மீட்டெடுப்பதற்கு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
மக்களும்கூட அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முந்தைய சூழலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது 24 சதவிகிதம் அளவுக்கு பற்றாக்குறையான அளவு மழை தற்போது பெய்திருக்கிறது. பருவநிலை காலங்களின் சீரழிவால் அதிகரித்திருக்கும் புவி வெப்பமயமாதல் காரணமாக, முன் எப்போதும் இல்லாத வகையில் பல நாடுகளில் அதீத வறட்சியும், அதீத வெள்ளமும் ஏற்பட்டுள்ளன.
தவிர ஒரு தனிநபருக்கான குடிநீர் தேவை என்பது படிப்படியாகக் குறைந்து வருகிறது. பல எண்ணிலடங்காக சுற்றுச்சூழல் சவால்கள் நாட்டை சூழ்ந்திருக்கின்றன. குடிநீர் விநியோகத்தில் ’ஆத்ம நிர்பர்’ எனும் தன்னிறைவு இலக்கை அடையும் வகையில் மத்திய அரசு, மாநிலங்கள், உள்ளாட்சி அமைப்புகள், குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
குடிநீர் பாதுகாப்பு இலக்கை அடைவதற்கான செலவினங்கள் தொடர்பானவற்றில் வெளிப்படைத்தன்மை தேவை. இது தொடர்பான புள்ளி விவரங்களை அனைவரும் அறியும் வகையில் கிடைக்கச் செய்யவேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
நாட்டில் பெய்யும் 428 டிஎம்சி கன அடி மழையில் பாதியையாவது தக்க வைத்துக்கொள்ளும் ஒரு அறிவியல் கொள்கையை பின்பற்றினால், இந்தியா உறுதியான முன்னேற்றத்தை அடைய முடியும். நீர் வளங்களை திறனுடன் பயன்படுத்தும் சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேல், 70 சதவிகித கழிவு நீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் அரபு நாடுகளின் தொழில்நுட்பம் ஆகியவற்றை இந்தியா பின்பற்றினால், இந்தியாவும் கூட தண்ணீர் வளத்தில் வலுப்பெற முடியும்.