இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு மேலும் 14 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே இறுதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கால் வைரஸ் பரவல் எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இந்த ஊரடங்கு காலத்தில் வைரசுக்கு எதிரா ஒரு குறிப்பிடத்தக்க எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாக வாய்ப்புள்ளதாகவும் வல்லுநர்கள் நம்புகின்றனர்.
கோவிட்-19 பரவலுக்கு எதிராக நாம் போராடிவரும் அதேநேரத்தில் இந்திய அரசியலில் இஸ்லாமிய வெறுப்புவாதத்தைப் பரப்பும் மற்றொரு சக்திவாய்ந்த வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவிவருகிறது. இந்தக் கொடூர வைரசை முறையாகக் கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் 130 கோடி மக்களைக் கொண்ட இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கும் இந்த வைரஸ் பெரும் அபாயமாக உருவாகும்.
கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைப் புறக்கணித்து டெல்லி நிஜாமுதீனில் நடத்தப்பட்ட சமய மாநாடு இந்த இஸ்லாமிய வெறுப்புவாதக் கருத்துகளுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்த சமய மாநாடு மூலம் நாட்டில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதை அவர்கள் தவிர்த்திருக்க வேண்டும். இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
ஆனால் இந்தியாவில் கரோனா ஜிகாத் நடத்தப்படுவதாக இந்த விஷயத்தைப் பொதுமக்களின் மனதில் நஞ்சாக சில ஊடகங்கள் திட்டமிட்டுப் பரப்பினர். இதனால் பொதுமக்கள் இஸ்லாமிய தெரு வியாபாரிகள், காய்கறி விற்பனை செய்பவர்களை மிரட்டும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற சில இஸ்லாமிய வெறுப்புவாத செயல்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் (எம்எல்ஏ) ஈடுபட்டனர்.
நாட்டில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரைக் குறிவைத்துத் தாக்கும் நடைமுறை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் இவற்றைக் குறைக்கும் செயல்களில் பிரதமர் நரேந்திர மோடியும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் 26ஆம் தேதி தொலைக்காட்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், நாடே கோவிட்-19 பரவலுக்கு எதிராகப் போராடிவரும் இந்தச் சூழ்நிலையில் ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தையே குற்றம் சுமத்துவது சரியான நடைமுறை அல்ல என்று எச்சரித்தார். மேலும், கோபத்திலோ பயத்திலோ யாராவது ஏதாவது தவறு செய்தால், அதற்கு நம்மால் ஒட்டுமொத்த சமூகத்தையும் குறை சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த வாரம் (ஏப்ரல் 19) பிரதமர் நரேந்திர மோடி, கரோனாவால் உருவாகியுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளிக்க அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட்-19 தொற்று இனம், மதம், நிறம், சாதி, மொழி, எல்லைகள் என்று எதையும் பார்ப்பதில்லை. இதை எதிர்கொள்ள ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் நாம் இணைய வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். மேலும், முக்கியமாக நாட்டின் எதிர்காலம் பொதுமக்களின் ஒற்றுமையிலேயே உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஆனால் பிரதமர் மோடி, மோகன் பகவத் என இருவரின் வேண்டுகோளும் சமூகத்தில் எவ்வித குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஏப்ரல் இறுதியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள், இஸ்லாமியர்களின் கடைகளிலிருந்து பொருள்களை வாங்க வேண்டாம் என்றும், அவர்களை குடியிருப்புப் பகுதிகளில் அனுமதிக்க வேண்டாம் என்றும் சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்திருந்தனர். இவர்கள் மூலம் கோவிட்-19 வைரஸ் எளிதில் பரவுவதாகவும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.