இதேபோல் பல்வேறு நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கீழே காண்போம்:-
பிரான்ஸ்:
- பிரான்ஸ் பத்திரிகைச் சுதந்திரச் சட்டம் 1881 இன்படி, பொய்யான செய்திகள், பிரசுரங்கள், பரப்புரைகள் மூலம் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பது சட்டவிரோதமானதாகும். நம்பிக்கைக்கு எதிராகப் பிரசுரம், புத்தகம் வெளியிடுவது, மூன்றாம் நபர் குறித்து போலிச் செய்தி வெளியிடுவது உள்ளிட்டவையும் சட்டவிரோதமாகும்.
- 2019ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், பிரான்ஸ் நாட்டில் அமல்படுத்தப்பட்ட சட்டம், போலிச் செய்திகள் என்றால் என்ன? என்பது குறித்து வரையறுக்கிறது. ஆதாரங்கள் இல்லாத தவறான குற்றச்சாட்டுகள், பொய்யான தகவல்களை அடிப்படையாக கொண்ட செய்திகள் மூலம் வாக்குப்பதிவின்போது செல்வாக்கு செலுத்துதல் ஆகியவை போலிச் செய்திகளாக கருதப்படுகின்றன. எனவே, பரப்புரைகளின்போதும் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பும் ஊடகத்திற்கு கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டன.
- சமூக வலைதளங்கள் மூலம் பொய்யான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் வழங்க இச்சட்டம் வழிவகுக்கிறது. தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பொய்யான செய்திகளை வெளியிடும் தளங்களை நீக்குவதற்கும் அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்த வெளிப்படைத்தன்மையை வெளியிடவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.
- தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ரத்து செய்யவும் பிரான்ஸ் நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதியில் வெளிநாடுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் வானொலி தவறான செய்திகளை வெளியிடும் பட்சத்தின் அதன் ஒலிபரப்பு உரிமையை ரத்து செய்யவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. கடந்த 2018ஆம் ஆண்டு, ஜூன் 7ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட இச்சட்டம் ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது.
சிங்கப்பூர்:
2019ஆம் ஆண்டு மே மாதம், ஆன்லைன் மூலம் பொய்யான செய்திகள் பரப்புவது குற்றச் செயல் எனச் சட்டம் வகுக்கப்பட்டது. தேச பாதுகாப்பு, பொது அமைதி, மக்கள் பாதுகாப்பு ஆகியவைக்கு எதிராக பொய்யான தகவல்கள் பகிரப்படுவது சட்டவிரோதமானது என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இச்சட்டத்திற்கு ஆதரவாக 72 பேர் வாக்களித்த நிலையில், அதற்கு எதிராக ஒன்பது பேர் மட்டுமே தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். பொய்யான செய்திகளை வெளியிடுபவருக்கு எதிராக கடும் அபராத தொகையும் சிறைவாசமும் விதிக்கப்படுகிறது.