டெல்லி : திரையரங்குகள் திறந்திருந்தாலும், ஏழு விழுக்காடு மக்கள் மட்டுமே அடுத்த 60 நாள்களுக்கு தாங்கள் படம் பார்க்கச் செல்ல தயாராக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது
கரோனா பயம் காரணமாக திரையரங்குகள் செல்வதில் மக்கள் தொடர்ந்து தயக்கம் காட்டுகிறார்கள் என்று லோக்கல் சர்க்கிள்ஸ் எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக ஏழு மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த திரையரங்குகளைத் திறக்க அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது.
டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர் மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில், "இப்போது பல மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாநிலங்களிலும் விரைவில் திறக்கப்படும். இந்நிலையில் வரவிருக்கும் 60 நாள்களில் மக்கள் திரையரங்குகளுக்கு செல்வார்களா என்று எங்கள் கணக்கெடுப்பில் கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதில், 74 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் திரையரங்குகளுக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், நான்கு விழுக்காட்டினர் புதிய திரைப்படங்கள் வந்தால் பார்க்கச் செல்வதாகக் கூறியுள்ளனர். மேலும், மூன்று விழுக்காட்டினர் கரோனாவை பொருட்படுத்தாமல் திரையரங்கங்களுக்கு படம் பார்க்கச் செல்வதாகத் தெரிவித்தனர்” என்று குறிப்பிட்டுள்ளது.