மூத்த பத்திரிகையாளர் பிரின்ஸ் ஜெபக்குமார் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் :
வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணியை உருவாக்கி, மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது. அசாதுதீன் ஓவைசி தமிழ்நாட்டில் முக்கிய சக்தியாக மாறுவாரா? அவருக்கு என்ன கிடைக்கும்? அவரது உதவி தற்போதைய அதிமுகவை நீக்குவதற்கான அமமுகவின் திட்டத்திற்கு ஓரளவாவது உதவுமா? அல்லது இது வாக்குகளை பிரிப்பதற்கு வழிவகுக்குமா? என்பது மற்றொரு கேள்வி.
பிகாரில் ஏஐஎம்ஐஎம் கட்சி ஐந்து தொகுதிகளை வென்றது போலல்லாமல், தமிழ்நாட்டில் போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை வெல்லும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. தற்போதைய கூட்டணியில் அமமுக வலுவான பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளது என்பதால் ஓவைசிக்கு விமர்சகர்கள் கூறும் பிஜேபி-பி அணி என்ற பிம்பத்தைத் துடைக்க உதவும். அமமுகவை பொறுத்தவரை, மக்களவை தேர்தல் 2019ஆம் ஆண்டு அதிமுக தோல்வி அடைந்த இடங்களில் அது பெற்றுள்ள தற்போதைய வாக்குகளை அதிகரிக்க இந்த தேர்தல் உதவும்.
M-காரணி
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மக்கள் தொகை மொத்தம் 7.21 கோடி ஆகும். அதில், முஸ்லீம்கள் 6 விழுக்காடாக உள்ளனர். அதாவது 42 லட்சமாகும். சில தொகுதிகளில் இந்த வாக்கு வித்தியாசம் சில ஆயிரம் இருந்தாலும், எந்தவொரு தொகுதியிலும் வாக்கு வித்தியாசம் 1 லட்சத்தை தாண்டாது. அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களை இழுபறிக்கு கொண்டுவர முடியுமே தவிர தனித்து நின்று வெல்ல முடியாது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலம் முழுவதும், 10 இடங்களில் வெற்றி வித்தியாசம் ஆயிரத்திற்கும் குறைவாகவும், சுமார் 25 இடங்களில் 3 ஆயிரத்திற்கும் குறைவாகவும் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு, இருப்பெரும் திராவிட கட்சிகளும் முஸ்லீம் கட்சிகளை தங்கள் அணியில் இணைத்துக் கொண்டு தங்கள் வாய்ப்புகளை அதிகரிக்கிறார்கள்.
கடந்த 2016இல் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரண்டு முஸ்லீம் கட்சிகள் இருந்தன. ஐந்து இடங்களில் போட்டியிட்ட ஐ.யூ.எம்.எல் ஒன்றில் வென்றது, மூன்று இடங்களில் போட்டியிட்ட ம.ம.க எதிலும் வெல்லவில்லை. மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில முஸ்லீம் லீக் ஆகிய இரண்டும் அதிமுகவுடன் இணைந்து, தலா ஒரு இடத்தில் போட்டியிட்டு அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தன.