ஹைதராபாத்: பேறுகாலப் பணியாளர் பயிற்சித் திட்டத்தை செயல்படுத்தி, பேறுகால பணியாளர்களை பணியமர்த்தி தாய்-சேய் நலத்தினை உறுதிப்படுத்தும் முன்னோடி மாநிலமாக தெலங்கானா இருக்கிறது. இப்பயிற்சித் திட்டம் தற்போது பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்த ஒன்றிய அரசும் முனைப்புக் காட்டி வருகிறது.
பேறுகாலப் பயிற்சித் திட்டம்: கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியன்று தெலங்கானா அரசால் பொது மற்றும் தனியார் பங்களிப்புத் திட்டமாக பேறுகாலப் பணியாளர் பயிற்சி முன்னெடுப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. பொது மற்றும் தனியார் பங்களிப்பாளர்களாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தெலுங்கானா அரசு, பெர்னான்டாஸ் பவுண்டேசன் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல அமைப்பு இணைந்து தெலங்கானாவில் தொழில்முறை பேறுகாலப் பணியாளர்களை உருவாக்கி வருகிறது.
பன்னாட்டு பேறுகாலப் பணியாளர் கூட்டமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டதின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்களுக்கு 18 மாத காலம் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கும் முறையாக இத்திட்டம் தொடர்ந்து வருகிறது. தெலங்கானாவில் இதுவரை 400 நபர்கள் பேறுகால பணியாளர்களாக பயிற்சிப் பெற்றுள்ளனர்.
தாய்-சேய் நலத்திட்டம்: இது குறித்து பெர்னான்டாஸ் பவுண்டேசனின் தலைவர், தலைச்சிறந்த மகப்பேறு மருத்துவர்களில் ஒருவரான எவிட்டா பெர்னான்டாஸிடம் பயிற்சி குறித்து வினவிய போது, 'பேறுகாலத்தில் கருவுற்றப் பெண்களை உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் உறுதிப்படுத்தி இயற்கை வழியில் குழந்தைகளைப் பெற்றெடுக்க உறுதுணையாக இருப்பவர்களே பேறுகாலப் பணியாளர்.
இவர்கள் உதவியுடன் பேறுகாலத்தில் பெரும்பாலும் அறுவைச் சிகிச்சையைத் தவிர்த்து இயற்கை வழியிலேயே குழந்தையைப் பெற்றெடுக்கலாம் எனத் தெரிவித்தார். இப்பயிற்சித் திட்டம் எவ்வாறு கைக்கொடுத்திருக்கிறது எனக் குடும்பநலத்துறை ஆணையர் வகட்டா கருணா அவர்களிடம் கேட்டபோது, "உண்மையில் நன்றாகவே கைக்கொடுத்திருக்கிறது, இதன்மூலம் தாய்-சேய் பாதுகாப்பு விகிதத்தில் இந்தியளவில் தெலங்கானா மூன்றாம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.
பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்த பரீசீலனை: மேலும், மருத்துவப் பாடத்திட்டத்திலும், செவிலியர் பாடத்திட்டலும் சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். பன்னாட்டிலிருந்து பயிற்சியாளர்களை அழைத்து வந்து பயிற்சித் தரும் பணியினை பெர்னான்டாஸ் பவுண்டேசன் மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது.