காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, கடந்தாண்டு நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, எவ்வித சிறப்பு அந்தஸ்துமற்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து மறுசீரமைப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்தவும், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர், தோன்றிய சட்டச் சிக்கல்களைச் சமாளிக்க ஒரு வலிமையான அதிகாரத்துவம் தேவைப்பட்டது.
இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரிஷ் சந்திர முர்முவைத் தவிர வேறு எவரும் சிறந்த தேர்வாக இருந்திருக்க முடியாது. ஏனெனில், அவர் ஏற்கனவே, குஜராத் (இஷ்ரத் ஜஹான்) என்கவுன்ட்டர் வழக்கில் மோடியிடம் தனக்கு இருந்த விசுவாசத்தை நிரூபித்திருந்தார். மேலும், ஒரு அதிகாரமிக்க அலுவலராக அவரது புத்திசாலித்தனம் நரேந்திர மோடிக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஏனெனில், குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது, மோடியின் தனிச் செயலராக இருந்தவர் கிரிஷ் சந்திர முர்மு.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் ஒன்று, சட்டபேரவையின்றி ஒன்று என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனால் குஜராத் கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அலுவலரான கிரிஷ் சந்திர முர்மு காஷ்மீரில் சிக்கலான பல சட்ட விஷயங்களைக் கையாள வேண்டியிருந்தது.
முதலமைச்சரின் செயலகம், இரண்டு தலைநகரங்களைக் கொண்ட ராஜ்பவன் ஆகியவற்றைக் கொண்டிருந்த ஒரு மாநிலம், இப்போது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லடாக் யூனியன் பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆனால், தற்போது அங்குள்ள அரசு அலுவலர்கள் கடுமையான குளிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் பூஜ்ஜிய வெப்பநிலைக்குக் கீழே மக்களுக்குச் சேவை செய்ய வேண்டியிருக்கும். முன்பு, இப்பகுதியில் இந்த நடைமுறை இருந்ததில்லை.
காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது, குளிர்காலத்தில் தலைமைச் செயலகம் ஜம்முவில் இருந்தும் கோடைக் காலத்தில் ஸ்ரீநகரில் இருந்தும் செயல்படும். இது அரசு அலுவலர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் அப்பகுதியில் நிலவும் கடும் குளிரில் இருந்து தப்ப உதவியது. அரசு சார்பற்ற நடவடிக்கைகளை எடுப்பது பாதுகாப்புப் படையினருக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது, அரசுக்கு எதிரான குரல்களை நசுக்குவது, பிரிவினைவாத இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது ஆகியவை முர்முவுக்கு வழங்கப்பட்ட முக்கியப் பணிகளாகும்.
குடியேற்ற சான்றிதழ்கள் எவ்வித சிக்கல்களுமின்றி வழங்க வேண்டியிருந்தது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டவுடன், புதிய மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் உள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு குடியேற்ற சான்றிதழ்களை எவ்வித சிக்கலுமின்றி வழங்கும் பணியை முர்மு போன்ற ஒரு அலுவலரால் மட்டுமே செய்ய முடியும்.