கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான ஒரு ஒப்பந்தத்தை அறிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தத்தை "நூற்றாண்டின் ஒப்பந்தம்" என அழைக்கிறார்கள். இந்த கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையின்படி, இஸ்ரேல் "சமாதான நோக்கத்தில், கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பகுதிகள் மீதான தனது இறையாண்மை அறிவிப்பை நிறுத்தி வைக்கும்" என்றும் இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை நிறுவவும், இருநாடுகளும் இணைந்து தடுப்பூசியை உருவாக்குவதன் மூலம் வைரஸை எதிர்ப்பதில் ஒத்துழைக்கவும், முஸ்லீம் பயணிகளை மத நோக்கங்களுக்காக ஜெருசலேம் மற்றும் அல்-அக்ஸா மசூதிக்கு செல்ல அனுமதிப்பது போன்ற மத்திய கிழக்கிற்கான இராஜதந்திர செயல்திட்டத்தை உருவாக்க ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகியவை இணைந்து செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் முயற்சியினால், தனது “அமைதிக்கான நோக்கம்” ஆவணத்தை வழங்கிய ஜனவரி 28 அன்று ஒரு வரவேற்பின் போது வெள்ளை மாளிகையில் ஆரம்ப சந்திப்புக்குப் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையிலான பரபரப்பான விவாதங்களைப் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஐக்கிய அரபு அமீரக பட்டத்து இளவரசர் ஷேக் மொஹமத் பின் சயீத் அல்-நஹ்யான் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை மூலம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அடுத்த மூன்று வாரங்களுக்குள், முதலீடு, சுற்றுலா, பாதுகாப்பு, விமான போக்குவரத்து, எரிசக்தி, சுகாதாரம், கலாச்சார பரிமாற்றம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட கூடும். இருப்பினும், பாலஸ்தீனம்-இஸ்ரேல் பிரச்னைகள் முடிவு செய்யப்படும் வரை ஜெருசலேமில் தனது தூதரகத்தை நிறுவ மாட்டோம் என்று அமீரகம் தெளிவுபடுத்தியுள்ளது. நெதன்யாகு கூறுகையில் மேற்குக் கரையில் தனது விரிவாக்க திட்டத்தை "தாமதப்படுத்த" மட்டுமே ஒப்புக் கொண்டதாகக் கூறினார். இரு தலைவர்களும் அவரவர் உள்நாட்டில் இருந்து வரும் விமர்சனங்களைத் தணிக்க இது ஒரு எச்சரிக்கையான முயற்சியாகத் தெரிகிறது.
சமீபத்திய கால நிகழ்வுகள். ஏற்கனவே வளைகுடா நாடுகளின் இஸ்ரேலை குறித்த ஒரு நெகிழ்வான அணுகுமுறையை குறிக்கின்றன. கடந்த ஆண்டு ஓமனுக்கு நெதன்யாகு விஜயம் செய்தது, கடந்த இருபது ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேலிய உளவுத்துறை பகிர்வு மூலம் பிராந்தியத்தில் அவர்களின் பொதுவான எதிரியான ஈரானின் செல்வாக்கை குறைத்தது, மகத்தான ஃபிஃபா கோப்பை கால்பந்து போட்டிக்கு இஸ்ரேலின் உளவுத்துறை அறிக்கைகளை பெறுவதற்கான கத்தாரின் ஆர்வம், பாலஸ்தீனியத்திற்கு நன்கொடை அளிக்கும் நாடுகளின் சோர்வு, ஒரு தேசமாக இருப்பதற்கான இஸ்ரேலின் உரிமையை ஒப்புக்கொண்டு, இஸ்ரேலிய தொழிலதிபர்கள் தமது நாட்டிற்கு பார்வையிட சவுதி பட்டத்து இளவரசர் சல்மான் அனுமதி வழங்கியது, இஸ்ரேலை நீண்டகாலமாக புறக்கணிப்பதன் பயனற்ற தன்மை குறித்த முஸ்லீம் நாடுகளிடையே நிலவும் கருத்து வேறுபாடு போன்ற இவை அனைத்தும் வளைகுடா நாடுகளை யூத அரசுடன் ஒரு நல்லுறவை நோக்கி மெதுவாக நகர்த்துகின்றன.
இந்த ஒப்பந்தம் பற்றிய மற்ற நாடுகளின் எதிர்வினைகள், அவற்றின் அறிவிக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கைகளின் படி உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்ட மூன்று நாடுகளும் வெளிப்படையாக மகிழ்ச்சியடைந்தன, இருப்பினும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வலதுசாரி குழுக்கள் நெதன்யாகு தங்களை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளன. வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளில் (GCC) மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா இன்னும் எந்த அதிகாரபூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை. அநேகமாக அது மற்ற வளைகுடா நாடுகளின் உறவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது. எவ்வாறாயினும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடனான அதன் நெருங்கிய உறவைத் தரக்கூடிய ஒப்பந்தத்தை கண்டனம் செய்வது என்பது சாத்தியமில்லை.
கத்தார் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளன. குவைத், அதன் பாலஸ்தீனத்திற்கான உறுதியான ஆதரவின் காரணமாக, தனது கருத்தை தெரிவிக்க இன்னும் சிறிது காலம் ஆகும். ஓமன் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்ட எகிப்தும் ஜோர்டானும் இயல்பாகவே இந்த ஒப்பந்தத்தை ஆதரித்துள்ளன
இந்த பிரச்னையில் முஸ்லிம் உலகம் தெளிவாக பிளவுபட்டுள்ளது. பாலஸ்தீனம் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்து கண்டித்தது என்றாலும், ஹமாஸ் இதனை "சியோனிச பாதைக்கு உதவுகிறது", என்று கூறுகிறது. ஈரான் அதை "ராஜதந்திர முட்டாள்தனம்" என்று கூறியுள்ளது.
துருக்கி இதனை "பாசாங்குத்தனம்" என்றும் அமீரகத்துடனான இராஜதந்திர உறவுகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளது. மலேசியா இதனை எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது என்று கூறுகிறது, ஆனால் இந்தோனேசியா இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை.
பாகிஸ்தானின் நிலை தான் கேள்விக்குறியாக உள்ளது. இருதலைக் கொள்ளி நிலையில் உள்ள அந்நாடு, இந்த ஒப்பந்தத்தை ஆய்வு செய்ததில் இது "தொலைநோக்கு தாக்கங்களை" ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளன. முக்கிய மேற்கத்திய நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளன.
இந்த ஒப்பந்தம் மூலம் யார் யார் என்னென்ன பலனை பெறப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.