பெய்ஜிங்: மக்கள் தொகையில் சீனா மிக வேகமாக வளர்ந்த ஒரு நாடு. தற்போதுள்ள நிலையில் சீனாவை எட்டிப் பிடிக்கும் நிலையில் இந்தியா உள்ளது. இதுவும் அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் சாத்தியமாகிவிடும் என்றே பலரும் கூறுகின்றனர்.
இந்நிலையில் சீனா நாம் இருவர் நமக்கொருவர் என்ற குழந்தை பிறப்பு திட்டத்துக்கு மூடுவிழாவை அறிவித்துள்ளது. இனிவரும் காலங்களில் சீனாவில் ஒருவர் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம்.
6 பேரில் ஒரு சிறுவன்
தற்போதுள்ள நிலையில் சீனாவில் 6 பெரியவர்களுக்கு ஒரு சிறுவர் என்ற நிலை உள்ளது. அதாவது, மக்கள் தொகையில் தந்தை- தாய், இரு தாத்தா- பாட்டி என 6 பேருக்கு ஒரு சிறுவர் மட்டுமே உள்ளனர். பொதுவாக சீனா மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டுவந்தபோது மக்கள் ஆடம்பரமான நிலைக்கு வந்தனர்.
பாரம்பரிய கலாசாரங்களை மறந்தனர், மேற்கத்திய கலாசாரத்தில் திளைத்தனர். விளைவு, தற்போது திருமணம், குடும்பம் என்ற கலாசாரத்துக்குள் அவர்கள் பெரும்பாலும் வருவதில்லை. தொழில், தனிநபர் உயர்வு காரணமாக அவர்கள் திருமணத்தை வெறுக்கின்றனர்.
கலாசார சிதைவு
இதையெல்லாம் சீனா ஆதரிக்கவில்லையென்றாலும் அங்குள்ள கலாசார மாற்றத்தை கண்கூடாக பார்க்க முடிகிறது. இளம்பெண்கள் செயற்கை கருத்தரித்தல் மையத்தை நாடும் சூழலும் உருவாகிவிட்டது.
இதற்கிடையில் அண்மையில் அந்நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் வெகுவாக சரிந்தது. இதற்கு மக்கள் சுயநலவாதிகளாக மாறியதும் ஒர் காரணம். அது எப்படி என்பதை பார்க்கலாம். முன்னதாக கம்யூனிசத் தலைவர் மாவோ சீனர்களின் தனிநபர் வருமானம் மற்றும் வாழ்வியலில் கவனம் செலுத்தினார். அவரின் மறைவுக்கு பின்னர்வந்த தலைவர்களும் அவரின் கொள்கைகளையை தூக்கிப்பிடித்தனர்.
குழந்தை பிறப்பு கட்டுப்பாடு
விளைவு, சீனா தனிநபர் வருமானம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது. ஆனால் கருவுறுதல் விழுக்காடு 1970ஆம் ஆண்டுகளில் இருந்து சீராக சரிய ஆரம்பித்தது. இதற்கிடையில், சீனத் தலைவர் டெங், நாட்டு மக்கள் ஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்தார்.
இந்தத் திட்டத்தில் சில தளர்வுகள் இருந்தன. அதாவது கிராமத்து பெண் என்றால் முதல் குழந்தை பிறந்த 5 ஆண்டுக்கு பிறகு மற்றுமொரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம். சிறுபான்மையின பெண்கள், ஆண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் கிடையாது. பெரும் தளர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள கால இடைவெளி ஏதுவும் இல்லை. பொதுவாக மூன்று குழந்தைகள் வரை பெற அனுமதிக்கப்பட்டனர்.
பெண் குழந்தை பிறப்பு சரிவு
இந்த ஒரு குழந்தை திட்டம் சீனாவில் பெரும் கலாசார புரட்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் கட்டாய கருக்கலைப்புகள் நடந்தன. ஏனெனில், சட்டத்தை மீறியவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் பெரும் அபராதங்கள் விதிக்கப்பட்டன.
இது சமூக பராமரிப்பு கட்டணம் என்றழைக்கப்பட்டன. இச்சட்டம் அமலுக்கு வந்த காலம் முதல் 2012ஆம் ஆண்டு முற்பகுதி வரை கிட்டத்தட்ட 314 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 31 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) வசூலிக்கப்பட்டன.
இதற்கிடையில் சிறுமிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வரி விதிக்கப்பட்டது. இதனால், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். மேலும், ஆண் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவே தாய்மார்கள் விரும்பினர். இதனால் பெண்கள் பிறப்பு விகிதிம் சீனாவில் வெகுவாக குறைந்தது.
தனிமரமான ஆண்கள்
இந்தப் பாலின இடைவெளி காரணமாக 2000ஆவது ஆண்டில் 100 சிறுமிகளுக்கு 110 சிறுவர்கள் மட்டுமே காணப்பட்டனர். இது 2010ஆம் ஆண்டில் 118 ஆக உயர்ந்திருந்தது. இதன் காரணமாக மணமகளுக்கு சரியான மணமகன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மொத்தம் 1.4 பில்லியன் (140 கோடி) மக்கள் தொகையில் 33 கோடி மட்டுமே பெண்கள் காணப்படுகின்றனர். இதனால் கிராமப் புற ஏழை-எளிய இளைஞர்களுக்கு உரிய துணை கிடைப்பதில் பெரும்சிக்கல் ஏற்பட்டது.
இதன்காரணமாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த ஆண்களை “வெற்றுக் கிளைகள்” என அம்மக்கள் அழைத்தனர்.