ஐதராபாத்: 2013ம் ஆண்டில் எல்லை சாலை திட்டம் என்ற மாபெரும் பொருளாதார உட்கட்டமைப்பு திட்டத்தை சீனா அறிவித்தது. இத்திட்டத்தில் இணையவுள்ள உறுப்பு நாடுகளின் வழியே தனது பொருளாதார வழித்தடத்தை பதிக்கவிருக்கிறது இத்திட்டம். இந்த பிஆர்ஐ (எல்லை சாலை திட்டம் அல்லது Border Road Initiative) திட்டத்தில் இந்தியா பங்கேற்கவில்லை. இத்திட்டத்தின் 10வது ஆண்டு தினத்தை கொண்டாடும் முன்னதாக ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பு இதற்கு இணையான மற்றொரு முன்மொழிவுடன் வந்துள்ளன. இந்தியாவை மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்கும் புதிய பொருளாதார வழித்தடம்(IMEEEC) ( India Middle East Europe Economic Coridor)குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவை ஐரோப்பிய நாடுகளுடன் சவுதி அரேபியா வழியாக இணைத்து விரைவான தடையற்ற வர்த்தகத்திற்கு உதவப்போகும் இந்த வழித்தடத்திற்கு, டெல்லியில் நடைபெற்ற 2 நாள் ஜி 20 கூட்டத்தில் சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, மேற்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இதற்கான ஒரு ஒப்பந்தத்திற்கு முன்வந்துள்ளன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல , சீனாவின் எல்லைச்சாலை திட்டத்திற்கு சரியான மாற்று திட்டத்தை முன்வைப்பதோடு, பாகிஸ்தானின் புவியியல் சார்ந்த முக்கியத்துவத்தையும் இந்த திட்டம் குறைக்கிறது. இந்தியாவை மத்திய ஆசியாவுடன் இணைக்கும் தரை வழிப்பாதையில் இயற்கையான மற்றும் வரலாற்று ரீதியிலான பாதை பாகிஸ்தான் வழியே செல்கிறது. ஆனால், இந்தியாவோ பாகிஸ்தானோ தற்போது இந்த பாதையை பயன்படுத்த முடியாது. இரு நாடுகளுக்கிடையிலான பிரிவினை மற்றும் அதனைத் தொடர்ந்த பிரச்சனைகள் இயற்கையான இந்த பாதைகளை லாபமற்றவையாக மாற்றிவிட்டன.
ஆனால் தற்போது ஆசியாவும், ஐரோப்பிய நாடுகளும் IMEEEC எனும் புதிய பாதையின் வழியே இணைக்கப்பட உள்ள நிலையில், இந்த பாதையைப் பொறுத்தவரையிலும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒரு பொருட்டே இல்லை என கூறலாம். சீனாவின் பிஆர்ஐ திட்டமானது பாகிஸ்தானில் நடைமுறையில் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. பெரும்பாலான மாகாணங்களில் கில்ஜித் பல்திஸ்தான் மற்றும் பலோசிஸ்தானில் உள்ள பிரிவினைவாத அமைப்புகள் இத்திட்டத்திற்கு எதிரான மனநிலையோடு இயங்கி வருகின்றன. பாகிஸ்தானில் இத்திட்டம் எதிர்கொள்ளும் சவால்கள் பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே கசப்புணர்வைத்தான் எதிர்காலத்தில் கொண்டு வரும்.
தற்போது இந்தியாவுக்கான மாற்றுப்பாதை தூரத்து வெளிச்சமாக இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதனை தடை செய்ய பாகிஸ்தான், சீனா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் முயற்சி செய்யலாம். சவுதிஅரேபியா புதிய பொருளாதார பாதையின் கூட்டாளியாக இருந்த போதிலும் பாகிஸ்தானின் நீண்டநாள் நண்பன் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், பொருளாதார பாதைக்கான விதை சவுதி அரேபியாவில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டில்தான் தூவப்பட்டது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கதாகிறது.
எனவே சவுதி அரோபியா மூலம் இத்திட்டத்தை முடக்குவதற்கு வாய்ப்பே இல்லை. இஸ்ரேலின் தலையீட்டுக்கு சிறிது வாய்ப்பிருந்த நிலையில், அந்நாட்டுக்கும் சவுதிக்கும் இடையே அணுக்கமான தீர்வுக்கும் அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இந்த பொருளாதாரப் பாதையானது பெரும்பாலும், கப்பல், ரயில்வே போக்குவரத்து மூலமே இணைக்கப்படும். இந்தியா மற்றும் அதன் பிற வர்த்தக நாடுகளுக்கிடையிலான பயண தூரத்தை 35 சதவீதத்திற்கும் கீழ் குறைப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். அதிகாரப்பூர்வ பாதை வரைபடம் இன்னமும் வெளியிடப்படவில்லை என்றாலும், எரிபொருள், மின்சாரம் மற்றும் கேபிள்கள் இணைப்பிற்காக கடலுக்கு கீழ் செல்லும் வழித்தடங்களும் உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. வரும் மாதங்களில் விரிவான திட்டம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய ஆசியாவில் உள்ள ஈரானின் சபஹர் துறைமுகத்துடனான இணைப்பிற்கு நீண்டகாலமாக முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இது பேருதவியாக இருக்கும். சபஹர் துறைமுகம் மற்றும் ஜாஹதான் நகரங்களுக்கிடையே ரயில் பாதை ஏற்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானை ஒதுக்கி வைக்க நீண்டகாலமாக இந்தியா முயற்சித்து வருகிறது. ஆனால் இதற்கு சீனாவும், பாகிஸ்தானும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றன. இதே போன்ற ஒரு நிலைமை ஈரானுக்கு எதிரான தனது நிலைப்பாட்டால், புதிய பொருளாதார வழித்தடத்தில் ஏற்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை.