தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் வியூகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்: மூத்த தூதர் - இந்திய அமெரிக்க உறவு

தென் சீனக் கடலில் உள்ள ஸ்ப்ராட்லி மற்றும் பாரசெல் தீவுகள் தொடர்பாக பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் சீனா தகராறில் ஈடுபட்டுள்ளது. ஸ்ப்ராட்லி தீவுகளை புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உரிமை கோருகின்றன, பாரசெல் தீவுகள் வியட்நாம் மற்றும் தைவானால் உரிமை கோரப்பட்டுள்ளன என மூத்த தூதர் ஒருவர் கூறியுள்ளார்.

அமெரிக்க இந்திய உறவு
அமெரிக்க இந்திய உறவு

By

Published : Sep 2, 2020, 3:52 PM IST

கிழக்கு லடாக்கில் இந்தியாவும் சீனாவும் எல்லை மோதலில் ஈடுபட்டிருக்கும் அதே சமயம், பெய்ஜிங் தென் சீனக் கடல் பிராந்தியத்தில் அதன் விரிவாக்கக் கொள்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், வாஷிங்டனின் இந்தோ-பசிபிக் வியூகத்தின் மையமாக இந்தியா இருக்கும் என்று அமெரிக்க மூத்த தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க-இந்தியா உத்திசார் கூட்டு மன்றம் (USISPF) ஏற்பாடு செய்திருந்த “அமெரிக்க-இந்தியா: புதிய சவால்களை வழிநடத்துதல்” என்ற கலந்துரையாடலில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்டீபன் பீகன், வாஷிங்டனின் புதிய இந்தோ-பசிபிக் திட்டமிடல் நவீன உலகத்தின் யதார்த்தங்களை பிரதிபலிக்கிறது, மேலும் இந்தோ-பசிபிக் திட்டமிடல் ஜனநாயக நாடுகளை மையமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்..

"இது சுதந்திரமான சந்தைகளை மையமாகக் கொண்டுள்ளது" என்று பீகன் திங்களன்று கூறினார்.

“இது இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் அமெரிக்க அரசு மற்றும் அமெரிக்க மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் மதிப்புகளில் கவனம் செலுத்துகிறது. அதை வெற்றிபெற செய்ய நாம் பிராந்தியத்தின் முழு அளவிலும் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதாரத்தின் அளவு, பாதுகாப்பு ஒத்துழைப்பின் அளவு ஆகியவை இதில் அடங்கும், மேலும் இந்த திட்டமிடலின் மையப் பகுதியாக இந்தியா இல்லாமல் இதனை செய்ய இயலாது. அதே சமயம், அமெரிக்கா இந்த வியூகத்தை உருவாக்கியிருந்தாலும் இந்தியாவின் துணையின்றி அது எங்களுக்கு வெற்றியை தராது என நான் நினைக்கிறேன்” என்று மேலும் அவர் கூறினார்.

2006-07ஆம் ஆண்டில் ஜப்பானிய பிரதமராக இருந்த ஷின்சோ அபே-வால் மாற்றியமைக்கப்பட்ட இந்தோ-பசிபிக் பகுதி, ஜப்பானின் கிழக்கு கடற்கரையிலிருந்து ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை வரை நீண்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் லடாக்கில், 45 ஆண்டுகளில் முதல் முறையாக உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் (LAC) இரு தரப்பிலும் இறப்புகளுக்கு வழிவகுத்த இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மோதலை அடுத்து பீகனின் கருத்துக்கள் வந்துள்ளது.

இதற்கிடையில், தென் சீனக் கடல் பிராந்தியத்தில் பெய்ஜிங்கின் ஆதிக்க அணுகுமுறை காரணமாக, கடந்த மாதம் சீன தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது விசா கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை அமெரிக்கா விதித்தது.

ஜூலை மாதத்தில், சீன மக்கள் விடுதலை இராணுவ (PLA) கடற்படை தென் சீனக் கடலில் தனது கடற்படைப் பயிற்சிகளைத் தொடங்கியது. பாரசெல் தீவுகளுக்கு அருகே சீனாவின் சமீபத்திய நடவடிக்கைகளை எதிர்கொள்ள, அமெரிக்கா தென் சீனக் கடலுக்கு மூன்று அணுசக்தி விமானம்தாங்கி கப்பல்களை அனுப்பியது.

தென் சீனக் கடலில் உள்ள ஸ்ப்ராட்லி மற்றும் பாரசெல் தீவுகள் தொடர்பாக பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் சீனா தகராறில் ஈடுபட்டுள்ளது. ஸ்ப்ராட்லி தீவுகளை புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உரிமை கோருகின்றன, பாரசெல் தீவுகள் வியட்நாம் மற்றும் தைவானால் உரிமை கோரப்பட்டுள்ளன.

உலகின் பரபரப்பான வணிகக் கப்பல் பாதைகளில் ஒன்றான தென்சீனக் கடலில் பிலிப்பைன்ஸின் உரிமைகளை சீனா மீறியதாக 2016ஆம் ஆண்டில் ஹேக்-கை தலைமையிடமாக கொண்ட நிரந்தர நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிலிப்பைன்ஸின் மீன்பிடித்தல் மற்றும் பெட்ரோலிய ஆய்வுகளில் சீனா தலையிடுவதாகவும், நீரில் செயற்கை தீவுகளை உருவாக்குவதாகவும், சீன மீனவர்கள் இந்த மண்டலத்தில் மீன்பிடிப்பதைத் தடுக்கத் தவறியதாகவும் நீதிமன்றம் குற்றம் சாட்டியது.

மீண்டும், ஜூலை மாதம், தென் சீனக் கடலில் சீனாவின் கடல்சார் சட்டங்களை மீறுவது குறித்து வியட்நாமும் பிலிப்பைன்ஸும் கவலைகளை எழுப்பின. இது தவிர, கிழக்கு சீனக் கடலில் பெய்ஜிங் டோக்கியோவுடன், சீனாவால் டயாயு தீவுகள் என்று அழைக்கப்படும் செங்காகு தீவுகள் குறித்த ஒரு தகராறில் ஈடுபட்டுள்ளது.

"நாங்கள் முன்னெடுக்கும் இந்தோ-பசிபிக் வியூகத்திற்கு இந்தியா தனது சொந்த உரிமை பங்களிப்பில் மிகப்பெரிய தலைமைத்துவத்தையும் ஆர்வத்தையும் காட்டியுள்ளது" என்று பீகன் கூறினார்.

"இந்தியாவும் அமெரிக்காவும் தமது பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தியுள்ளன. நாங்கள் வர்த்தக தாராளமயமாக்கலின் சில பரிமாணங்கள் உட்பட, இன்னும் பரந்த பொருளாதார உறவைத் தேடும் பணியில் இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

"நாங்கள் பாதுகாப்புத் துறையிலும் மிக நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். மிக சமீபத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை மலபார் கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க அழைத்தது, இந்தோ-பசிபிக் கடல் பகுதியை கடந்து செல்வதற்கான சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதன் மிகப்பெரிய நோக்கத்தை தெளிவாகக் குறிக்கிறது ”

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடன் சேர்ந்து ஒரு நாற்கர பாதுகாப்பு பேச்சுவார்த்தை மூலமாக அமைந்த குவாட் என்று அழைக்கப்படுகிற முறைசாரா உத்திசார் அமைப்பு, வழக்கமான உச்சிமாநாடு, தகவல் பரிமாற்றம் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான இராணுவ பயிற்சி போன்றவற்றால் பராமரிக்கப்படுகிறது.

இந்த பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கம் காரணமாக இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, செழிப்பு மற்றும் கடல் பாதைகளை உறுதிப்படுத்த இந்த அமைப்பு முயல்கிறது. இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் முன்னெப்போதும் இல்லாத வகைவில், மலபார் பயிற்சி என்றழைக்கப்படும் கூட்டு இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது. இது, அதிகரித்துவரும் சீன பொருளாதார மற்றும் இராணுவ சக்திக்கு பதிலளிக்கும் வகையில் இராஜதந்திர மற்றும் இராணுவ ஏற்பாடுகள் என பரவலாகக் கருதப்பட்டாலும் பெய்ஜிங் குவாட் உறுப்பினர்களுக்கு முறையான இராஜதந்திர எதிர்ப்புக்களை தெரிவித்தது.

சிங்கப்பூரில் 2018ஆம் ஆண்டு நடந்த ஷாங்க்ரி-லா கலந்துரையாடலில், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் 10 நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்), இந்தோ-பசிபிக் எதிர்காலத்திற்கு மையமாக இருக்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கைக்கு பின்னர் அமெரிக்காவின் இந்திய பசிபிக் வியூகத்தின் மையப்பகுதி இந்தியா என்ற பீகனின் அறிக்கை வந்துள்ளது..

"இதில் இந்தியா மட்டுமல்ல, பல நாடுகளும் இந்தோ-பசிபிக் பகுதியில் ஆசியானை மையப்படுத்தி வைத்திருக்கின்றன. இதன் பொருள் என்னெவென்றால், பிராந்தியத்தில் உள்ள பிரச்சினைகளை ஆசியான் தலைமையிலான நிறுவனங்கள் மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும்" என்று கேட்வே ஹவுஸ் சிந்தனைக் குழுவில் புகழ்பெற்றவரும், மியான்மருக்கான இந்திய தூதராக பணியாற்றியவருமான ராஜீ பாட்டியா ஈடிவி பாரத்-திடம் தெரிவித்தார்.

ஆனால், மறுபுறம், அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் வியூகத்தின் மையப்பகுதி இந்தியா என்று ஒரு அமெரிக்க அதிகாரி கூறுகிறார் என்றால், வாஷிங்டனின் கொள்கையை பொறுத்தவரை பிராந்தியத்தில் ​​சீனாவை கையாள்வதற்கு இந்தியா மிகவும் முக்கியமானது என்று அர்த்தம் என்று இந்தோ-பசிபிக் விவகாரங்கள் குறித்து அடிக்கடி கருத்து தெரிவிப்பவரான பாட்டியா விளக்கினார்.

ABOUT THE AUTHOR

...view details