மூத்த பத்திரிகையாளர் பிரின்ஸ் ஜெபக்குமார் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:
மீண்டும் தொடக்கப்புள்ளியில் வந்து நிற்கிறது அதிமுக. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிகொள்ளும் ஆளும் அதிமுகவின் முடிவு, ஈழம் உள்பட பல விவகாரங்களில் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் மீண்டும் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதை காட்டுகிறது. பரம எதிரிகளான திமுகவும் அதிமுகவும், பெரியார், அண்ணா போன்றவர்களால் தங்களின் தாய் இயக்கம் எவ்வாறு பிறந்து வளர்ந்தது என்பதை தெளிவாகக் குறிப்பிடுகின்றன. ஆனால், தற்போது அந்த தொனி, மனநிலை ஆகியவற்றில் மாற்றம் காணப்படுகிறது. தமிழ் தேசியவாதக் கொள்கையுடன் ஒரு இணக்கம் காணப்படுகிறது.
"பாஜகவுடனான கூட்டணி தேர்தலுக்காக மட்டுமேயன்றி, ஒருபோதும் கருத்தியல் ரீதியாக இருக்காது" என, சில நாட்களுக்கு முன்பு ஊடக மாநாடு ஒன்றில் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். சிஏஏ சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதாக பாஜக நாடாளுமன்றத்தில் கூறியதாகவும், எனவேதான அதை ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு தாங்கள் வந்ததாகவும், சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் விளக்கம் அளித்த அதிமுக, தற்போது சிஏஏவை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளது. சிஏஏவை கைவிடுவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்ற வாக்குறுதி, பாஜகவை சங்கடத்தில் ஆழ்த்தும் என்பது உறுதி. மறுபுறம், இலங்கையைச் சேர்ந்தவர்கள் இப்போது இங்குள்ள அகதிகள் முகாம்களில் தங்குவதற்கு ஏதுவாக நாடுகளின் பட்டியலைத் திருத்துவதாக திமுக உறுதியளித்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள்
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவித்தல், தனி தமிழீழத்தை உருவாக்குதல், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச நடுநிலை அமைப்பின் வழிமுறை மூலம் நீதி வழங்குவதற்கு அதிமுக மீண்டும் வலியுறுத்துகிறது. தமிழ்ப் பகுதிகளில் உள்ள மாகாண அரசாங்கத்திற்கு முழு அதிகாரங்களை வழங்க பாடுபடப்போவதாக திமுக தனது பங்கிற்கு கூறியுள்ளது. இந்தியாவில் தங்குவதற்கு முடிவுசெய்தவர்களுக்கான இந்தியக் குடியுரிமை மற்றும் நிரந்தர வசிப்பிடம் என்ற அடிப்படையில் இரு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன.