தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

’மாற வேண்டியது சமூகம்தான்’ - LGBTQIA+ சமூகத்தினர் குறித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கிய நீதிபதி!

”இந்தச் சமூகமும், நமது வளர்ப்பு முறையும் என்றுமே தன் பால் ஈர்ப்பாளர்கள், ஒரு பால் ஈர்ப்புடைய ஆண், பெண் சமூகத்தினரை சபிக்கப்பட்டவர்களாகவே நடத்தி வந்துள்ளது. இதில், பெரும்பான்மை சமூகம், எப்போதும் அறியாமை, முந்தைய தீர்மானங்களை சார்ந்தே நிற்கும்” - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

By

Published : Jun 7, 2021, 11:42 PM IST

Updated : Jun 8, 2021, 1:08 AM IST

மதுரையைச் சேர்ந்த தன்பால் ஈர்ப்பாளர்களான இரண்டு பெண்கள் காதலிக்கத் தொடங்கியதை அடுத்து, தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சென்னையில் குடியேறி வாழ்ந்து வந்தனர். ஆனால், அப்பெண்களின் பெற்றோர்கள், முன்னதாக தங்கள் மகள்களைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பெண்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், LGBTQIA+ எனப்படும் பால் புதுமையினரின் (தன் பால் ஈர்ப்பாளர்கள், இரு பால் ஈர்ப்பாளர்கள், திருநர்கள், பன்முக பால் பண்பு கொண்டவர்கள், பால் ஈர்ப்பு அற்றவர்கள் உள்ளிட்டோர்) பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பை இன்று (ஜூன்.07) வழங்கியுள்ளார்.

பால் புதுமையினரின் "PRIDE MARCH"

உலகம் முழுவதும் ஜூன் மாதம் Pride month எனும் பெயரில் பால்புதுமையினருக்கான மாதமாக அனுசரிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

’கண்டும் காணாமல் செல்வதை நியாயப்படுத்த முடியாது’

தனது தீர்ப்பில் "ஒடுக்குமுறைகளைக் களைய முயற்சிக்காமல், அவற்றை கண்டும் காணாமல் செல்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது” என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பால் புதுமையினர் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பால் புதுமையினர், காவல் துறையினர் உள்ளிட்ட அலுவலர்களால் துன்புறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பால் புதுமையினருக்காக இயங்கும் ஆதரவுக் குழுக்களை கணக்கிட்டு, இணையம் மூலமாகவே அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்க ஆவண செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

பால் புதுமையினருடன் உரையாடிய நீதிபதி

முன்னதாக, பால் புதுமையினரின் பிரச்னைகளையும், உணர்வுகள் சரியாகப் புரிந்து கொள்ளும் வகையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உளவியல்-கல்வி அமர்வுகளில் கலந்துகொண்டு, பால் புதுமையினருடன் பல உரையாடல்களையும் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் “வாழ்க்கை என்னும் மரத்தில் பல கிளைகள் உள்ளன, ஒரு கிளை மட்டுமே இருக்க வாய்ப்பில்லை. அதேபோல் மனிதர்கள் அனைவருக்கும் தங்கள் இயல்பிலேயே இருக்க உரிமை உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பில், தானும் பால் புதுமையினர் குறித்து தவறான புரிதலை முன்னர் கொண்டிருந்ததை ஒப்புக் கொண்டுள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தனது சுய கற்றலை விவரித்து, இந்தச் சமூகத்தில், அடிப்படையில் பால் புதுமையினருக்கு எதிராக உள்ள கருத்துகளையும், மனப்பான்மையையும் எவ்வாறு சரி செய்வது என்பதையும் நமக்கு உணர்த்துகிறார்.

சபிக்கப்பட்டவர்களாக நடத்திய சமூகம்

சுயத்தைக் கொண்டாடும் பால் புதுமையினர்

"நானும் தன் பால் ஈர்ப்பாளர்களை முழுமையாக புரிந்து கொள்ளாத பெரும்பான்மை சாமானியர்களைச் சேர்ந்தவன்தான் என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்தச் சமூகமும், நமது வளர்ப்பு முறையும் என்றுமே தன் பால் ஈர்ப்பாளர்கள், ஒரு பால் ஈர்ப்புடைய ஆண், பெண் சமூகத்தினரை சபிக்கப்பட்டவர்களாகவே நடத்தி வந்துள்ளது. இதில், பெரும்பான்மை சமூகம், எப்போதும் அறியாமை, முந்தைய தீர்மானங்களை சார்ந்தே நிற்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

’மாற வேண்டியது சமூகம்தான்’

"மனு தொடர்ந்த பெண்களுடன் தனித்தனியாக பேசிய பிறகு, இந்த சமூகக் கட்டமைப்புக்கும், பாரம்பரிய நெறிகளுக்கும் ஏற்றது போல் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியவர்கள், அவர்கள் அல்ல, அவர்களைப் புரிந்துகொள்வதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் நாம் தான் புதிய பயணத்தைத் தொடங்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை அணுகுவதற்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பல நிபுணர்களுடன் உளவியல் கல்வி அமர்வுகளில் கலந்துகொண்ட நிலையில், மனு தொடர்ந்த பெண்களின் பெற்றோருக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கிற்காக, ​​உளவியல் நிபுணர் மருத்துவர் வித்யா தினகரனுடன் அவர் மேற்கொண்ட கல்வி அமர்வு குறித்த அறிக்கை ஒன்றையும் தனது தீர்ப்புடன் சேர்த்து ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்டுள்ளார்.

’பால் புதுமையினரின் காதலை உடல் தேவையாக மட்டுமே அணுகுவது தவறு’

அதில், மனுதாரர்களின் விவாதம் எப்படி இருந்தது என்பதையும், விவாதத்தின் முடிவில் அந்த இரண்டு பெண்களும் எவ்வாறு இணையாகக் காணப்பட்டனர் என்றும், தான் கொண்டிருந்த தவறான எண்ணத்தை உணர்ந்ததையும் குறிப்பிட்டுள்ளார். மேலும், "தன்பாலின ஈர்ப்பு உடல் சார்ந்த தேவையாக மட்டுமே பெரும்பாலும் பார்க்கப்படுவது தெரிய வருகிறது. இது மிகவும் தவறான கருத்து. காதலில் இருக்கும் வழக்கமான ஆண்-பெண் ஜோடியினர், உடலுறவில் ஈடுபடுவதற்காக மட்டுமே ஒன்றாக இருப்பதாக நாம் நினைப்பதில்லை. இதை அனைத்து பாலினத்தவர்களுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும். "என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

இந்த விவகாரத்தில் மருத்துவர் வித்யா தினகரன் உடனான விவாதத்தில் இருந்து ஒரு பெரிய அளவிலான புரிதலைப் பெற்ற பிறகு, நீதிபதி வெங்கடேஷ், பால் புதுமையினர் குறித்த கள நிலவரங்களை அறியவும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சமூக ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகளை அறியவும் அச்சமூகத்தினருடன் மேலும் கலந்துரையாடியுள்ளார். மருத்துவர் எல்.ராமகிருஷ்ணன், சன்மதி ஆகியோருடனும், மருத்துவரும் நடிகரும் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரி மாணவியுமான மருத்துவர் திரினேத்ரா ஹல்தார் கும்மராஜு உடனும், அவரது தாயாரும் திருநங்கையுமான ஹைமா ஹல்தார் உடனும் கலந்துரையாடி உள்ளார்.

’எனது அறியாமை இருளை விலக்கிய மனுதாரர்கள்’

”நான் தீர்மானித்து வைத்திருந்த அனைத்து கருத்துக்களையும் மாற்ற வேண்டும் என்பதையும் LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்தவர்களை அப்படியே ஏற்றுக் கொண்டு இச்சமூகத்தில் ஒருவராக பார்க்கத் தொடங்க வேண்டும் என்பதையும் இந்த அமர்வு எனக்கு ஆழமாக உணர்த்தியது. இந்த விஷயத்தில், மனுதாரர்கள், திருமதி வித்யா தினகரன், மருத்துவர் திரினேத்ரா ஆகியோர் தான் எனது குருக்களாக இருந்து உதவி, என்னை அறியாமை என்னும் இருளில் இருந்து வெளிக்கொணர்ந்து பரிணாம வளர்ச்சி அடையச் செய்துள்ளனர்” என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

மேலும், "தன் பால் ஈர்ப்பாளர்கள் எவரையும் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. நான் அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்திராததால், அவர்களைப் பற்றிய புரிதலும் எனக்கு இல்லை. இந்தச் சமூகமும், நமது வளர்ப்பு முறையும் என்றுமே தன் பால் ஈர்ப்பாளர்கள், ஒரு பால் ஈர்ப்புடைய ஆண், பெண் சமூகத்தினரை சபிக்கப்பட்டவர்களாகவே நடத்தி வந்துள்ளது. இதில், பெரும்பான்மை சமூகம், எப்போதும் அறியாமை, முந்தைய தீர்மானங்களை சார்ந்தே நிற்கும். நான் பால் புதுமையினர் குறித்து பேசும் பலரையும் கடந்து வந்துள்ளேன், ஆனால், எவருமே அவர்களுக்கு சாதகமான தாக்கத்தை என்னிடம் ஏற்படுத்தியது இல்லை.”

வெறும் 15 நிமிடங்களில் நிகழ்ந்த மாற்றம்...

”இந்த உரையாடலின் தொடக்கத்திலிருந்தும், அது முடிவடைந்த நேரத்திலிருந்தும் எனக்குள் ஏற்பட்ட கருத்து மாற்றத்தை நான் சரியாக விவரிக்க வேண்டுமானால், சக ஆண்-பெண் ஜோடிகளைப் போலவே இந்த வழக்கின் மனுதாரர்கள் என்னிடம் தங்களது காதலையும், ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பதையும் விவரித்தார்கள். அவர்கள் சொன்னவை அனைத்தும் மிகவும் இயல்பாக இருந்தது. உண்மையில் இங்கு என்ன முரணாக உள்ளது என்று எனக்கு நானே கேள்வி எழுப்பினேன். இந்த மாற்றம் வெறும் பதினைந்தே நிமிடங்களில் எனக்குள் நிகழ்ந்தது "என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Jun 8, 2021, 1:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details