பொது நிறுவனங்களிலிருந்தும், அரசு வங்கிகளிலிருந்தும் அரசின் முதலீட்டை ராஜதந்திரமாக விலக்கிக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியின் தீர்மானம் ஆர்எஸ்எஸ்ஸுடன் இணைவுகொண்ட 44 கிளை அமைப்புகளில் ஒன்றான பாரதிய மஜ்டூர் சங்கின் (பிஎம்எஸ்) கடும் எதிர்ப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று ஈடிவி பாரத்திற்குத் தகவல் கிடைத்திருக்கிறது.
பிஎம்எஸ் பொதுச்செயலாளர் பினோய் குமார் சின்ஹா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய, கடுமையான வார்த்தைகள் கொண்ட தனது கடிதத்தில் அரசின் முதலீட்டை விலக்கிக் கொள்ளுதல், மத்தியப் பொது நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை ராஜதந்திரமாக விற்று பணமாக்குதல் என்ற அரசின் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
கடிதத்தின் பிரதி ஒன்று ஈடிவி பாரத் பார்வைக்கு வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் சின்ஹா ரயில்வே மற்றும் துப்பாக்கித் தொழிற்சாலை வாரியம் (ஆர்ட்னென்ஸ் ஃபாக்டரி போர்டு – ஓஎஃப்பி) ஆகியவற்றைத் தனியார் பெருநிறுவனமயமாக்குதலை எதிர்த்துப் பேசியுள்ளார்.
“அரசின் முதலீட்டை விலக்கிக் கொள்ளுதல், மத்தியப் பொது நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பாதுகாப்புத் துறை, ரயில்வே ஆகியவற்றை தனியார் பெருநிறுவனங்களிடம் விற்று பணமாக்குதல் என்று உங்கள் பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கும் தீர்மானம் கடினமாக உழைக்கும் வர்க்கத்தினராகிய தொழிலாளர்களின் உணர்வுகளையும், பொதுமக்களின் உணர்வுகளையும் கடுமையாகப் புண்படுத்திவிட்டது” என்று பினோய் சின்ஹா அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.
பிஎம்எஸ்-ஸின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம்கொண்ட உச்ச அமைப்பான கேந்திரிய கார்ய சமிதி (கேகேஎஸ்) இந்தப் பிரச்சினையை மூன்று நாள்கள் சென்னையில் விவாதித்திருக்கிறது.
சில தகவலின்படி, ஒரு மூத்த ஆர்எஸ்எஸ் கட்சிக்காரரும் சென்னைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். அந்தக் கூட்டம் பிப்ரவரி 12இல் தொடங்கி 14இல் முடிந்தது. அப்போது பிஎம்எஸ் பிரதமர் மோடி அரசின் தனியார்மயமாக்கல் முயற்சிக்கு எதிராகப் பல தீர்மானங்களைக் கொண்டுவந்து அவற்றை நிறைவேற்றியது.
மூன்று நாள்களும் சென்னையில் நடந்த கூட்டத்தில் அந்த மூத்த ஆர்எஸ்எஸ் கட்சிக்காரரின் முன்னிலையில் பிரச்சினை விவாதிக்கப்பட்டதால், அரசின் பேரார்வம் மிக்க தனியார்மயமாக்குதல் திட்டத்திற்கு எதிராக பிஎம்எஸ்-ஸின் கேகேஎஸ் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஆர்எஸ்எஸ்ஸின் ஆதரவு இருக்கிறது என்று ஈடிவிக்கு வந்த ஒரு தகவல் கூறியது.
“எதிர்காலத்தில் நாங்கள் நடத்தப் போகின்ற போராட்டங்களை விலக்கிக் கொள்ளுங்கள் என்று அவர்கள் (ஆர்எஸ்எஸ்) எங்களைக் கேட்டுக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஒரு மூத்த ஆர்எஸ்எஸ் கட்சிக்காரரின் முன்னிலையில்தான் எங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன” என்று சொன்னது அந்தத் தகவல்.
அரசு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிலக்கரி, நிலக்கரி அல்லாத தொழில், சிமெண்ட், பொறியியல், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இயங்கும் பொது நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து அரசு முதலீட்டை விலக்கிக் கொள்ளப்போகும் மத்திய அரசின் தீர்மானத்தை பிஎம்எஸ் கடுமையாக எதிர்க்கும் என்று கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானங்கள் ஆணித்தரமாகச் சொல்லிவிட்டன.
பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட கடிதமும், “அரசின் இந்தக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கேகேஎஸ் தீர்மானித்து இருக்கிறது,” என்று சொல்லி இருக்கிறது.