சமீபத்தில், நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தரவுகளின்படி கோடிக்கணக்கான இந்தியர்கள் பல ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கிறார்கள். 3.8 கோடிக்கு மேற்பட்ட வழக்குகளின்கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. மேலும் நாட்டின் 25 உயர் நீதிமன்றங்களில் 57 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தெரிவிக்கின்றன.
நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஆனால், அதிக எண்ணிக்கையில் நீதிபதிகளின் பதவிகள் காலியாக இருப்பது மக்களுக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு மிகப்பெரிய காரணியாக உள்ளது. உயர் நீதிமன்றங்களில் 40% பதவிகள் காலியாக உள்ளன. மேலும் 20%க்கும் மேற்பட்ட பதவிகள் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ளன.
கோவிட்-19 தொற்றுநோய்க் காலத்திலிருந்து இந்தியாவின் நீதித்துறை, கடுமையான நீதிபதிகளின் பற்றாக்குறையை சமாளித்து வருகிறது, உச்ச நீதிமன்றம் மற்றும் 25 உயர் நீதிமன்றங்களில் மொத்தமுள்ள 1,080 நீதிபதி இடங்களில் 441 இடங்கள் கடந்த ஆண்டு காலியாக இருந்தது. இது மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 40 விழுக்காடாகும்.
மேலும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் உள்ள 661 நீதிபதி பதவிகளில், 255 அல்லது மொத்தம் நிரப்பப்பட்ட பதவிகளில் கிட்டத்தட்ட 40%, கடந்த மூன்று ஆண்டுகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்டனர்.
2020ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் மற்றும் நாட்டின் 10 உயர் நீதிமன்றங்களுக்கு எந்த நீதிபதியும் நியமிக்கப்படவில்லை என்றாலும், கடந்த ஆண்டு 15 உயர் நீதிமன்றங்களில் 66 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தில் 34 பதவிகளில், 2020ல் நான்கு பதவிகள் மட்டுமே காலியாக இருந்தன. ஆனால் நியமிக்கப்பட்ட 30 நீதிபதிகளில், 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.
உயர் நீதிமன்றங்களில் 40% நீதிபதி காலியிடங்கள்:
நாட்டின் 25 உயர் நீதிமன்றங்களில் மட்டும் உள்ள 1,046 நீதிபதி பதவிகள், 135 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு சேவை செய்கின்றன. ஆனால், மொத்தம் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 415 (40%) இடங்கள் கடந்த 2020ஆம் ஆண்டு காலியாக இருந்தன. நாட்டில் ஏழு உயர் நீதிமன்றங்கள் ஏறக்குறைய பாதி அல்லது அதற்கும் குறைவான நீதிபதிகளுடன் செயல்பட்டு வருகின்றன என்பது இன்னும் கவலைக்குரியது.
பாட்னா உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில், மொத்தம் 53 பதவிகளில், 21 நீதிபதிகள் மட்டுமே கடந்த ஆண்டு பணிபுரிந்தனர். 32 பதவிகள் காலியாக இருந்தன. இது மொத்த எண்ணிக்கையில் 60%க்கும் அதிகமாகும். இதேபோல், கல்கத்தா உயர் நீதிமன்றத்தில், மொத்தம் 72 நீதிபதி பதவிகளில் 40 பதவிகள் காலியாக இருந்தன. இது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 55%க்கும் அதிகமாகும்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், 50 நீதிபதி பதவிகளில் 27 காலியிடங்களும், ஜோத்பூர் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள உயர் நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகளும் 23 நீதிபதிகளுடன் மட்டுமே பணியாற்றி வருகின்றன. மத்தியப்பிரதேசத்தில், மொத்தம் 53 பதவிகளில் 26 காலியிடங்கள், ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில், மொத்தம் 37 நீதிபதி பதவிகளில் 18 இடங்கள் கடந்த ஆண்டு காலியாக இருந்தன. இது இரண்டு உயர் நீதிமன்றங்களுக்கான மொத்த எண்ணிக்கையில் பாதி ஆகும்.
புதன்கிழமை(மார்ச்.17) நாடாளுமன்றத்தில் அரசாங்கம் பகிர்ந்து கொண்ட சமீபத்திய தகவல்களின்படி தேசியத் தலைநகரில் உள்ள டெல்லி உயர் நீதிமன்றத்திலும் இதே நிலைமை உள்ளது; மொத்தம் 60 பதவிகளில் 29 இடங்கள் கடந்த ஆண்டு காலியாக இருந்தன.
ஒடிசா உயர் நீதிமன்றத்தில், 27 பதவிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்குப் பதிலாக 15 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வந்தனர், மேலும் 12 பதவிகள் காலியாக இருந்தன, இது மொத்தப் பதவிகளில் 45% ஆகும்.