பள்ளிப் படிப்பை கைவிட்ட மாணவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு கொண்டு வர முடியாவிட்டால், இந்தியா மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இல்லையெனில் நாடு பின்னோக்கிய பாதையில் பயணிக்கும். எனவே, தற்போதைய காலகட்டத்தை ஒரு தேசிய கல்வி அவசரநிலையாக கருத வேண்டும் என்று கல்வியாளர் கிருஷ்ண குமார் எச்சரித்துள்ளார்.
கரோனா காரணமாக நாடு முழுவதும் பல கோடி குழந்தைகள் கல்வி கற்பது தடைபட்டுள்ளதாக கல்வியாளர் பத்மஸ்ரீ கிருஷ்ண குமார் கவலை தெரிவித்த்துள்ளார். அவசர காலமாக கருதி நடவடிக்கை எடுக்காவிட்டால், அதற்காக நாடு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கல்வியின் இந்த நிலைமையை குறைத்து மதிப்பிட்டால், நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றமும் வெகுவாக பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கிருஷ்ண குமார், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) இயக்குநராக பணியாற்றியவர் ஆவார். அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் கல்வி பேராசிரியராகவும் பணியாற்றினார். மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறக்கவும், குழந்தைகளை மீண்டும் படிக்கச் செய்யவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதி உதவி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இவை அனைத்திற்கும் முன்னர், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு தொற்று நோயின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள ஒரு விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். ஈநாடு செய்தித் தாளுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், இந்தியாவில் கல்வி முறை குறித்த பல ஆலோசனைகளை கிருஷ்ண குமார் வழங்கியுள்ளார். அவற்றை விரிவாக பார்க்கலாம்…
கோவிட்-19 இரண்டாவது அலை கல்வியை எவ்வாறு பாதிக்கும்?
தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்ற லட்சக்கணக்கான - புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடைய குழந்தைகளின் கல்வி நிலை குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. மெட்ரோ நகரங்களில் கூட, ஏராளமான குழந்தைகள் கல்வியை இழந்தனர். முதல் அலைக்குப் பிறகு தொழிலாளர்கள் மீண்டும் நகரங்களுக்குச் சென்றாலும், அவர்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்துச் செல்லவில்லை. மேலும், நாடு தழுவிய அளவில் லட்சக்கணக்கான தனியார் பள்ளிகள் மூடப்பட்டன. அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாது.
பாதிப்பைக் குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன செய்திருக்க வேண்டும்? இப்போது அவர்கள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம்?
கோவிட்-19 மாணவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவான கணக்கெடுப்பு முதலில் நடத்தப்பட வேண்டும். நம்பகமான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். துல்லியமான கள ஆய்வு தரவுகள் இல்லாமல் கூட்டுத் திட்டங்களை உருவாக்க முடியாது.
கடந்த ஒரு வருடத்தில், மதிய உணவு திட்டம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது, இது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை எவ்வாறு பாதித்திருக்கும் என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டும். மூடப்பட்ட தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எங்கு இருந்தார்கள் என்பதை அறிவது மிக முக்கியம். அவர்களில் சிலர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருப்பார்கள். ஆனால் எண்ணிக்கையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், அரசு நடத்தும் பள்ளிகளில் கூடுதல் இடம் மற்றும் கற்பித்தல் வசதிகளை வழங்க முடியும்.
ஏராளமான குழந்தைகள், குறிப்பாக கிராமப்புற ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பைக் கைவிட்டு, குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவிட்டதாகத் தெரிகிறது. நாம் இதற்கான தரவுகளை சேகரிக்க முடிந்தால், அவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தலாம்.
சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில வாரியங்கள் தேர்வுகளை ரத்து செய்துள்ளன அல்லது ஒத்திவைத்துள்ளன. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?
10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைப்பது நியாயமானதே. உண்மையில், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கடந்த ஆண்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகளை கவனித்தார்கள். எனவே, தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்தலாம். ஆனால், இவை எதுவும் சாத்தியம் அற்றது. டிஜிட்டல் சாதனங்கள் தேவைப்படும் குழந்தைகளுக்கு தற்காலிக அடிப்படையில் அவற்றை அமைத்துத் தரலாம். தற்போது, பல பல்கலைக் கழகங்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகின்றன.
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி, கல்வியின் தரத்தை பாதிக்கிறது. இந்த இடைவெளியை எவ்வாறு குறைப்பது?
இந்த இடைவெளி தொற்றுநோய்க்கும் முன்பே இருந்தது. ஆனால் அது இப்போது தெளிவாகியுள்ளது அவ்வளவே. அரசு மற்றும் தனியார் துறைகளில் ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்க முடியாத தனியார் பள்ளிகளுக்கு, அரசு நிதி உதவி வழங்க வேண்டும். இதன் மூலமாக, நாம் திறமையான ஆசிரியர்களை நியமிக்க முடியும்.
இதேபோல், தொற்று நோய் பரவலால் மூடப்பட்ட பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு அரசு ஆதரவளிக்க வேண்டும். அதை ஒரு சுமையாக கருத முடியாது. எல்லா குழந்தைகளும் மீண்டும் பள்ளிகளுக்கு வந்தால், போதுமான ஆசிரியர்களையும் உள் கட்டமைப்பையும் வழங்க அதிக செலவாகும். நிர்வாக சிக்கல்கள் காரணமாக செயல்படுத்த தாமதமாகும். கல்வியின் நிலையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதை கட்டாயம் செய்ய வேண்டும்.
நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் கூட டிஜிட்டல் வகுப்புகளில் படித்து வருகின்றனர். அது அவர்களை எவ்வாறு பாதிக்கும்?
இந்தியாவைத் தவிர, உலகில் எந்த நாடும் மழலையர் வகுப்புகளுக்கும் பாலர் வகுப்புகளுக்கும் டிஜிட்டல் முறையில் பாடங்களை நடத்துவதில்லை. குழந்தைகளின் உளவியல் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்கும்போது, அது அவர்களின் மன நிலைக்கு நல்லதல்ல. பெரியவர்களையும் வயது வந்த குழந்தைகளையும் வைத்து குழந்தைகளுக்கு கற்பிக்கலாம் என்பதை வலியுறுத்துவதன் மூலமாக, நாம் ஒரு வழியைக் காணலாம்.
எனது கருத்துப்படி, தொற்றுநோய் பிரச்னை முடிந்தவுடன், ஆன்லைன் வகுப்புகளில் படித்த நான்கு வயது குழந்தைகளின் கண்பார்வை மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை பரிசோதித்துப் பார்ப்பது நல்லது. இந்த வயது குழந்தைகளுக்கு கடுமையான கற்றல் முறை தேவையில்லை. சில அடிப்படை விஷயங்களை கற்பிக்க வேண்டி இருந்தாலும் அவற்றை தவிர்த்து விடலாம்.
தொற்று நோயால் கோடிக் கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதை உறுதி செய்ய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?
அத்தகைய மாணவர்கள் அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்பட வேண்டும். கோடிக்கணக்கான குழந்தைகள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாவும், அடிப்படைக் கல்வி கிடைக்காதவர்களாகவும் உள்ளனர். கணக்கெடுப்பு முடிந்ததும், ஒவ்வொரு படிநிலைக்கும் எவ்வளவு உதவி வழங்க இயலும் என்பதை அரசாங்கம் தீர்மானிக்க முடியும். ஊரடங்கு காலத்தில் மூடப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு மத்திய மாநில அரசுகள் நிதி உதவி வழங்க வேண்டும். அரசுப் பள்ளியா தனியார் பள்ளியா என்பது இப்போது கேள்வி அல்ல. பள்ளியில் மாணவர்கள் யாராவது இருந்தார்களா என்பது தான் முதன்மையான கருத்தாக இருக்க வேண்டும். நிலைமை மேம்பட்ட பிறகு, இந்த உதவியை தொடர்ந்து செய்வதைப் பற்றி அரசு மதிப்பாய்வு செய்யலாம்.
இந்த நேரத்தில், நாம் ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கிறோம். அதற்கேற்ப நாம் செயலாற்ற வேண்டும். பள்ளிப்படிப்பை கைவிட்ட மாணவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு கொண்டு வர முடியாவிட்டால், இந்தியா மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இல்லையெனில் நாடு பின்னோக்கிய பாதையில் பயணிக்கும். எனவே, தற்போதைய காலகட்டத்தை ஒரு தேசிய கல்வி அவசரநிலையாக கருதி செயலாற்ற வேண்டும். இவ்வாறு கல்வியாளர் பத்மஸ்ரீ கிருஷ்ண குமார் ஈநாடு செய்தித்தாளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல விஷயங்களை தெரிவித்தார்.