சென்ற வாரம், பல மாநில அரசுகள் இந்தச் சட்டங்களில் புதிய திருத்தங்களை புகுத்தத் தொடங்கியுள்ளதன் பின்னணியில் இந்த விவாதம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கரோனா ஏற்படுத்தியுள்ள அசாதாரண சூழலைப் பயன்படுத்தி, பல போராட்டங்களின் வழியாக பல ஆண்டுகளாக வென்றெடுத்த தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு ஆப்பு வைக்கப்படுவதாக எதிர்ப்பு வலுத்துள்ளது.
கோமாவில் உறைந்துக் கிடக்கும் தொழில் துறையை கைதூக்கிவிடும் நோக்கில், நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக மத்தியப் பிரதேச அரசு தொழிலாளர் நலச் சட்டங்களில் தளர்வை அறிவித்தது. மத்தியப் பிரதேச அரசுதான் இதற்கு முதன் முதலாக பிள்ளையார் சுழி போட்டுள்ளது. இதனை அடியொற்றியே, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, மஹாராஷ்டிரம் மற்றும் கேரள அரசுகளும், சரிவை நோக்கிச் செல்லும் தொழில் துறையைக் காப்பாற்றும் முகமாக சில பல நடவடிக்கைகளைக் கையிலெடுத்துள்ளன.
ஒடிசா, கோவா மற்றும் கர்நாடக மாநில அரசுகள், சில தளர்வுகளை செயல்படுத்த ஆலோசித்து வருகின்றன. பணித்தளத்தில் வேலை நேர நீட்டிப்பு (Increased Working Hours), கூடுதல் பணிக்கான காலத்தைக் கூட்டுதல் (Setting Overtime Limit), தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு (Factory Inspection) செய்வதைக் கைவிடுதல் மற்றும் தொழிற்சங்கம் அமைக்கத் தேவையான ஊழியரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் ஆகியவை, இந்த தளர்வு நடவடிக்கைகளில் முக்கியமானவை ஆகும்.
இந்த மாற்றங்கள், ஓராண்டு முதல் மூன்றாடுகள் வரையோ அல்லது மூன்று மாதங்கள் மட்டுமோ நடைமுறையில் இருக்கும். மிகவும் துணிச்சலாக, உத்தரப் பிரதேச அரசு அனைத்து தொழிலாளர் நலச்சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. தொழிலாளர் நலம் பேணும் சட்டங்களில் மூன்றைத்தவிர, ஏனைய அனைத்தையும் 1000 நாள்களுக்கு நிறுத்தியுள்ளது, உ.பி அரசு.
இதில் தப்பித்த மூன்று சட்டங்கள்:
- கட்டடங்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் சட்டம்
- கொத்தடிமை ஒழிப்புச் சட்டம்
- கூலி வழங்கல் சட்டம்
விதிவிலக்காக, கேரளா எந்த ஒரு மாற்றத்தையோ, தளர்வையோ முன்வைக்கவில்லை. கேரள அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, இதனைப் புரிந்துகொள்ளமுடியும். இருப்பினும், முதலீடுகளை ஈர்க்க வேண்டி மிகுந்த எச்சரிக்கையுடன் கேரள அரசு செயல்படுகிறது. ஒரே வாரத்தில், தொழில் தொடங்குவதற்கான அனுமதி அளிக்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆனால் ஒரு நிபந்தனை: முதலீட்டாளர் ஒரே ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவு செய்திட முன்வரவேண்டும். அதற்கான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த மாற்றங்களின் தேவையைப் புரிந்துகொள்ளவே இப்போதுதான் மாநிலங்களுக்கு கண் பார்வை திறந்ததா என்ற கேள்வி எழலாம். இதற்கு இரண்டு பிரதான காரணங்களை முன்வைக்கலாம்.
முதலாவது: பெருமளவில் அதிகரித்துள்ள மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர் தொழிலாளரின் எண்ணிக்கை. ஊரடங்கின் காரணமாக புலம் பெயர் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக சொந்த ஊர் திரும்பியுள்ளது, மஹாராஷ்டிரம், குஜராத் போன்ற தொழில் துறையில் முன்னேறிய மாநிலங்களில் ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.
இந்த வெற்றிடத்தை அவ்வளவு எளிதில் நிரப்ப முடியாது என்பதே யதார்த்தம். காரணம், மிகவும் இன்றியமையாத அடிப்படைத் தேவையான தொழிலாளர்கள் போதிய அளவு இல்லாது போனால், தொழில்துறையை ஊக்குவிக்க மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு பொருளாதார திட்டங்கள் அனைத்தும் பயனற்றுப் போகும். அவற்றை நடைமுறைப்படுத்துவது கானல் நீராகும்.
ஊரடங்கை ஒட்டி, சொந்த ஊர் சென்ற பெருவாரியான புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரிந்த நிறுவனங்களுக்கு மீண்டும் திரும்புவதில் நிலவும் நிச்சயமற்ற சூழலில், தொழிற்சாலைகள் கிடைக்கக்கூடிய ஆட்களைக் கொண்டே உற்பத்தியை மீண்டும் தொடங்க வேண்டி இருக்கும். இதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம் உண்டு. இந்நிலையில், வேலை நேரத்தை நீட்டிப்பது உற்பத்தி தொய்வின்றி நடைபெறவும், பொருளாதாரமும் தொழிற்துறையும் மீண்டெழ உதவுவதுடன், புலம்பெயர் தொழிலாளர் திரும்பிவருவதற்கான நம்பிக்கையையும் அளிக்கும்.
இரண்டாவதாக, தற்போது சீனாவில் செயல்படும் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி ஆலைகளை வேறிடம் மாற்றிக்கொள்ள திட்டமிடுகையில், மேலே சொல்லப்பட்ட முதலீட்டாளர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள் – தொழிலாளர் நல சட்ட தளர்வுகள் – அந்நிறுவனங்களின் கவனத்தை இந்தியாவின் பால் திருப்பி நமக்கு சாதகமாக அமையும். அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான 'ஆப்பிள்' தனது சீன உற்பத்தி செயல்பாடுகளில் 25 விழுக்காட்டை, இந்தியாவில் மேற்கொள்ளவிரும்புவதாக முன்னரே அறிவித்துள்ளது.
இன்னும் பிற நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறத் தயாராகி வருகின்றன. சீனாவில் செயல்படும் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு தங்கள் உற்பத்தித் தளத்தை மாற்றிக்கொள்ளவேண்டி இந்திய அதிகாரிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அரசும் அந்த நிறுவனங்களைக் குறிவைத்து செயல்படுவதாக நம்பப்படுகிறது.
குறிப்பாக, ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், கணினி வன்பொருள், மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துத் தயாரிப்பு, தோல், உணவுப் பதப்படுத்துதல் மற்றும் கனரக தொழில் துறை ஆகியவற்றைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்திக் களம் இறங்க முனைப்புக் காட்டுகிறது. இந்த நல்வாய்ப்பை நழுவவிடாமல் இருக்க, 461 சதுர கிலோமீட்டர் நிலத்தை அந்நிய முதலீட்டாளர்களுக்கு என்றே ஒதுக்கீடு செய்துள்ளது.
அத்தகைய நிறுவனங்களின் வருகை, வளைகுடா நாடுகளில் வேலை இழந்து தாயகம் திரும்பிய பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும். இந்த வாய்ப்பினை நழுவ விடாமல் பற்றிக்கொள்ள குஜராத், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தயாராக உள்ளன. குஜராத்தில் பெருமளவு முதலீடு செய்துள்ள ஜப்பானும் தென் கொரியாவும், சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் உற்பத்திக் களம் அமைக்க ஏற்ற இடம் தேடுகின்றன.
தொழிலாளர் நலன் குறித்த சட்டங்கள் இந்திய அரசியல் சாசனத்தின் பொதுப் பட்டியலில் உள்ள காரணத்தால், மாநில அரசுகள் இது தொடர்பாக நிறைவேற்றும் எந்த ஒரு சட்டமும், மத்திய அரசின் சட்டத்திற்கு முரணாக அமைந்தால், அது செல்லாததாக ஆகும். இந்தச் சிக்கலை எதிர்கொண்டு சமாளிக்க மாநில அரசுகள் ஒரு வழிமுறையைக் கையாளுகின்றன. அதுதான் அவசரச் சட்டம்!
பெரும்பாலான மாநில அரசுகள், இந்த மாற்றங்களை அவசரச் சட்டம் மூலமாகவே கொண்டுவந்துள்ளன.பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் ஆகிய இருவரும், அவசரச் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். பிரதமர் ஒப்புதலுடன் அவசரச் சட்டம் இயற்றுவதால் தேவையற்ற சிக்கல் எழாமல் தவிர்க்கலாம்.
மேலும், நாடாளுமன்றமோ அல்லது சட்டமன்றங்களோ கூடாத சூழல், அவசரச் சட்டம் கொண்டுவர இந்த மாநில அரசுகளுக்கு ஒரு எதிர்பாராத நல் வாய்ப்பாக அமைந்துள்ளது எனலாம். எந்தச் சிக்கலும் தடைகளுமின்றி, ஒரு குறிப்பிட்ட காலம் வரை இந்த மாற்றங்களைச் செயல்படுத்தலாம். ஆனால், தொழிலாளர் நலச் சட்டங்களில் இந்த மாநில அரசுகள் மெற்கொண்டுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்புகளும் தடைகளும் இல்லாமல் இல்லை.
மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு சக்திகளிடமிருந்தே எதிர்ப்பு கிளம்பி இருப்பது தான் ஆச்சரியம். பாஜக ஆதரவு தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்) இந்த மாற்றங்களை கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த மாற்றங்களும் தளர்வுகளும் தொழிலாளர் விரோதம் என்று கண்டனம் தெரிவித்து, இவற்றை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியுள்ளது.
வேறு சில தொழிற்சங்கங்களும் இந்த நடவடிக்கைக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. தொழிற் சங்கங்களின் பார்வையில், தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வது அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்கு மட்டுமின்றி, நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரானது ஆகும். ஒரு தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கும் தற்போதைய நடைமுறையை மாற்றி, சீர்திருத்தம் என்னும் பெயரில் வழிமுறைகளை இன்னும் கடுமையானதாக ஆக்கியிருப்பது தொழிலாளர் அமைப்புகளின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
மேலும், இந்த புதிய நடைமுறைகள், கடந்த ஆண்டில் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட கூலி வழங்கல் சட்டத்திற்குப் புறம்பாக உள்ளது. எனவே, இந்த புதிய சட்ட நடைமுறைகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாட தகுந்த அடிப்படை முகாந்திரம் உள்ளது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும், தளர்வுகளின் அளவு வேறுபாட்டாலும், தொழிலாளர் நலச் சட்டங்களில் தற்போதைய தேவைக்கேற்ப மாற்றங்களை முன்னெடுத்திருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இது, இந்த நடவடிக்கைகளுக்கு எதிரானப் போராட்டங்களை முனை மழுங்கச் செய்யும். இருப்பினும், இந்த சட்ட திருத்தங்கள் எவ்வளவு காலம் நீடிக்கும், அமலில் இருக்கும் என்பதில் மாநிலங்களுக்கு இடையே வேறுபாடு உள்ளது. இதற்கு எதிராக எழும் மறுப்பும் நியாயமானதே. ஹரியானா மூன்று மாதங்கள் என்ற வரையறையை தொடக்கத்தில் கொண்டிருக்க, உத்தரப் பிரதேசம் 1000 நாள்களுக்கு தொழிலாளர் நல சட்டங்களைத் தடை செய்துள்ளது.
தொழிற்துறை மீண்டெழ மூன்று மாதம் என்பது மிகவும் குறைவு என்றால், மூன்று ஆண்டுகளும் அதற்கு மேலும் என்பது கொடுமையின் உச்சம் எனலாம். எனவே தான், தொழிலாளர் நலன் சார்ந்த பொருளாதார முன்னெடுப்பு அவசியமாகிறது. இந்தச் சூழலில், அரசுகள் தங்கள் நோக்கங்களை தொழிலாளர்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம். புதிய சட்டத் திருத்தங்கள் அவர்களின் நலனுக்கு எதிரானதல்ல, அவர்களின் நலனைக் குழி தோண்டிப் புதைப்பதற்கல்ல என்று தெளிவுப்படுத்தி, அவர்கள் ஏற்றுக்கொள்ள வைப்பது அரசுகளின் கடமையாகும்.
இதையும் படிங்க:மே தினமும், ஊரடங்கின் மத்தியில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையும்!