குற்றப் பின்னணி கொண்ட நபரைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிப்பதற்கான காரணங்களை விளக்குமாறு அரசியல் கட்சிகளிடம் கேட்டு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத் தீர்ப்பு, அரசியல் கட்சிகள் மீது தார்மீக அழுத்தத்தை உருவாக்குவதில் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கக்கூடும். ஏனெனில், அத்தகைய வேட்பாளருக்கு கட்சி ஏன் வாய்ப்பு வழங்கியது என்பது குறித்து பொது அரங்கில் விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆனால், துரதிருஷ்டவசமாக அரசியல் கட்சிகளிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதன் மூலம் தார்மீக அழுத்தத்தை உருவாக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்குவதைத் தாண்டி தீர்ப்பு ஒரு அங்குலம்கூட செல்லவில்லை.
இதில் எழுந்துள்ள பெரிய கேள்வி என்னவென்றால், இத்தீர்ப்பின் மூலம் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் மீது போதுமான தார்மீக அழுத்தத்தை உருவாக்கினால் அத்தகைய வேட்பாளர்களை நியமிப்பதற்கு எதிராகத் திடீரென முடிவு செய்துவிட்டால், குற்றவியல் பின்னணி உள்ள வேட்பாளரை பரிந்துரைக்கும் முன் அவர்கள் இருமுறை யோசிப்பார்களா? தேர்தலில் குற்றவாளிகளைத் தடுக்கும் தேர்தல் ஆணையத்தின் முயற்சியில் முன்னேற இந்தத் தீர்ப்பால் உதவ முடியுமா?
அரசியலில் குற்றவாளிகள் இருப்பது என்பது இந்திய அரசியல் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னையாகும். தொடர்ச்சியாக நாடாளுமன்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களின் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்வு ஏற்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில், 24 விழுக்காடு உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது 2009ஆம் ஆண்டு 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்ற தேர்தில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் போட்டியிட கட்டுப்பாடுகள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு குறைந்தபட்சம் இந்த விஷயம்கூட மாற்றப்பட்டதாகத் தெரியவில்லை.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 43 விழுக்காடு உறுப்பினர்கள் குற்றப் பின்னணியுடன் உள்ளனர். பல்வேறு மாநில சட்டப்பேரவைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் குற்றப் பதிவுகளைப் பொறுத்தவரை, பெரியளவில் மாற்றமில்லை. பெரும்பாலான மாநில சட்டப்பேரவைகளில் குற்றப் பின்னணி உடையவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
சமீபத்தில் முடிவடைந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தல்கள், ஆம் ஆத்மி கட்சி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றிபெற்றது. அதே நேரம் குற்றப் பின்னணி கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இதில் அதிகரித்துள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில், 2015ஆம் ஆண்டு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் 2020ஆம் ஆண்டு தேர்தலில் இது 42ஆக அதிகரித்துள்ளது.
கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வெறுக்கத்தக்க பேச்சு உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளைக் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 2015ஆம் ஆண்டு 14இல் இருந்து உயர்ந்து 2020ஆம் ஆண்டு 37ஆக உள்ளது.
நாடாளுமன்றத்தைப் போலவே, டெல்லி சட்டப்பேரவையில் மாற்றத்திற்கான அரசியலை வழங்குவதாக உறுதியளித்த ஆம் ஆத்மி கட்சியாவது இதில் மற்ற கட்சிகளிடமிருந்து வித்தியாசப்பட்டிருக்கும் என்று எதிர்பார்த்திருந்தபோதும், துரதிருஷ்டவசமாக அது நடக்கவில்லை.
சமீபத்திய தீர்ப்பில், வேட்பாளர்களை நியமிக்கும்போது அரசியல் கட்சிகளுக்கு ஆறு வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் விதித்தது. அரசியல் கட்சிகள் தாங்கள் களமிறக்கிய வேட்பாளர்களுக்கு எதிராக நிலுவையிலுள்ள குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை, அதன் வலைத்தளங்களில் பதிவேற்றுவதை இந்தத் தீர்ப்பு கட்டாயமாக்குகிறது.