தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்தது தவறா... பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன? - சென்னை செய்திகள்

பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வது அவ்வளவு சிறந்த பலனைத் தராது. மேலும், இது கடனை திரும்பச் செலுத்தும் முறையையும் பாதிக்கும். விவசாயிகள் கடனை பெற்றுவிட்டு அரசு தள்ளுபடி செய்யும் எனக் காத்திருந்து திரும்பச் செலுத்தாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. இவை கூட்டுறவு வங்கிகளின் கடன் கொடுக்கும் திறனையும் பாதிக்கும்.

crop loan waiver spoils credit culture
crop loan waiver spoils credit culture

By

Published : Feb 10, 2021, 6:19 PM IST

சென்னை: வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்யும் அரசின் முடிவுக்கு ஒரு சில பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவை எதிர்வினைகளை ஏற்படுத்தும் என அவர்கள் வாதிடுகின்றனர். ஏன் இதைக் கூறுகிறார்கள்? இது ஏற்படுத்தும் விளைவுகள் என்னென்ன என்பதைக் குறித்து அறியலாம்.

தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பெறப்பட்ட 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளின் திறன் குறையும்

வேளாண் கடன் தள்ளுபடி மூலம் சிறு குறு விவசாயிகள் பெரிய அளவுக்குப் பயன்பெறப்போவதில்லை எனப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் CACP குழுவின் முன்னாள் தலைவர் மகேந்திர தேவ் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் "பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வது அவ்வளவு சிறந்த பலனைத் தராது. மேலும், இது கடனை திரும்பச் செலுத்தும் முறையையும் பாதிக்கும். விவசாயிகள் கடனை பெற்றுவிட்டு அரசு தள்ளுபடி செய்யும் எனக் காத்திருந்து திரும்பச் செலுத்தாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. இவை கூட்டுறவு வங்கிகளின் கடன் கொடுக்கும் திறனையும் பாதிக்கும்.

பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு

இதுபோன்ற கடன் தள்ளுபடி அறிவிப்பால் பெரு விவசாயிகள் மற்றும் நடுத்தர விவசாயிகள் மட்டுமே பயனடைவர். ஏனென்றால், அவர்களே அதிக அளவுக்கு வங்கியிலிருந்து கடன் பெறுவர். சிறு, குறு விவசாயிகள் கந்து வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தனி நபர்களிடம் இருந்தே கடன் பெறுவர், இதனால் சிறு, குறு விவசாயிகள் கடன் தள்ளுபடி மூலம் பெரிய அளவுக்குப் பயன்பெறப் போவதில்லை. இதற்குப் பதிலாக அரசு விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் மானியம் வழங்கலாம்" என்றார்

ஆந்திரா மாநிலத்தில் நிலம் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் மாநில அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல, மத்திய அரசு 2019 ஆம் ஆண்டு பிரதமர் கிசான் எனும் விவசாயிகள் அட்டை கொண்டவர்களுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தைத் தொடங்கியது.

விளை பொருட்களுக்குச் சரியான விலை கிடைத்தாலே போதும்

வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைத்தால் நாங்கள் ஏன் கடன் தள்ளுபடி கோரப் போகிறோம் எனக் கேள்வி எழுப்புகிறார் அகில இந்திய கிசான் சங்க மாநிலச் செயலாளர் சண்முகம். வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை அரசு தீர்மானிக்க வேண்டுமென்றும், வேளாண் உற்பத்தியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

’தேசிய வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்க’

பெரும் முதலாளிகளுக்கும், தொழில் துறையினருக்கும் கடன் தள்ளுபடி செய்யும் போது அதை யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால், சிறு விவசாயிகளுக்குச் சொற்பத் தொகையைத் தள்ளுபடி செய்தால் அது விமர்சிக்கப்படுகிறது. மற்ற அனைத்து துறைகளும் லாபம் ஈட்டும் நோக்கில் இயங்கி வருகின்றனர். ஆனால், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு லாபம் கிடைப்பதில்லை என சண்முகம் வருத்தம் தெரிவித்தார்.

பெரு நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் தள்ளுபடி மட்டும் சரியானதா!

இதே கருத்தையே வேளாண் பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயாவும் முன்வைக்கிறார். இதுகுறித்து அவர் பேசும்போது, "பெரு நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடி செய்யும்போது அதனை யாரும் கேள்வி எழுப்புவதில்லை. விவசாயிகளுக்கு சில ஆயிரங்களைத் தள்ளுபடி செய்தால் ஏன் அது பெரிதாக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் நீரவ் மோடி கொண்டு சென்றபோது யாரும் பேசவில்லை, பெருமுதலாளிகளுக்கு வரிச் சலுகைகள் வழங்கிய போது அதுபற்றி விவாதம் செய்யப்படவில்லை. சிறு, குறு விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்படும் தொகை மிகவும் குறைவு.

ஜோம்பி கடன் என்றால் என்ன?

கடன் தள்ளுபடி செய்வதால் விவசாயிகள் கடனை திரும்பச் செலுத்துவதில்லை என்று கூறமுடியாது. சிறிய விவசாயிகள் சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.அவர்கள் அதிக அளவில் கடனை திரும்பச் செலுத்துகிறார்கள். ஆனால், வேளாண்மையில் ஏராளமான பிரச்னை இருக்கும்போது, மூலப் பொருள்களுக்குச் செலவிட்ட தொகையைத் திரும்பப் பெற முடியாத போது அவர்கள் என்ன செய்ய முடியும். வேளாண் கடன் தள்ளுபடி முறையை அரசியல் லாபத்துக்காகத் தொடர்ந்து பல்வேறு அரசுகளும் பின்பற்றுகின்றன.

தீர்வுகள் என்ன?

விவசாயிகளைத் தன்னிறைவு கொண்டவர்களாக மாற்ற அரசு, கிராமப்புறங்களில் உள்கட்டுமான வசதிகள் மேம்படுத்துவதில் முதலீடு செய்யவேண்டும். வேளாண் ஆராய்ச்சி, மண் ஆராய்ச்சி, வேளாண் பகுதிகளுக்கு மின்சார வசதி, சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு உள்ளிட்டவற்றை உருவாக்க வேண்டும்.

இவற்றுடன் சேர்த்து வேளாண் பொருட்களில் பெரிய அளவுக்கு ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்க ‘நிலையான நிதி’ என்ற நிதித் தொகுப்பை உருவாக்க வேண்டும். இதன்மூலம் சந்தையில் விலை குறைந்தாலும் விவசாயிகள் பாதுகாக்கப்படுவர்.

கழுத்தை நெரித்த கூட்டுறவு வங்கிக் கடன்: விவசாயி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

அதேபோல, அண்மைக்காலமாக இயற்கை சீற்றங்களாலும் விவசாயிகள் பாதிப்பைச் சந்திக்கின்றனர். இதிலிருந்து அவர்களைப் பாதுகாக்கச் சிறந்த முறையில் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் இன்றைக்கு அமலில் உள்ள காப்பீடு திட்டங்கள் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்பதற்கு விவசாயிகளுக்குச் சாதகமாக இல்லை" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details