உலகளவில் கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட மரணங்கள் 10 லட்சத்தைத் தாண்டிவிட்டன. உலக நாடுகள் அதற்கு எதிராக ஒருங்கிணைந்த, உறுதியான முயற்சியை மேற்கொள்ளாவிட்டால் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை கடக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. நெருக்கடியைத் தவிர்க்க, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராடுவதற்கு தயாராக இருக்கிறோமா என்பது தான் தற்போதைய கேள்வி.
அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாதபோது, யாருமே பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற சிந்தனை இல்லாமல் ஒருதலைப்பட்ச அணுகுமுறையில் சில நாடுகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறை கூறியுள்ளது. கோவிட்டின் பிறப்பிடமான சீனாவில் 4,650க்கும் குறைவான மக்கள் மட்டுமே இறந்துள்ள நிலையில், வல்லரசான அமெரிக்காவில் தொற்றுநோய் காரணமாக இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். இந்தியாவில் இன்னும் ஒரு வாரத்தில் இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இறப்பு விகிதம் குறைந்து வருவது ஒரு நம்பிக்கைக்குரிய வளர்ச்சியாக இருந்தாலும், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அதே நேரத்தில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மருத்துவ சேவையை வழங்குவது அரசாங்கங்களின் கடமையாக இருந்தாலும், தொற்றுநோய் பற்றிய மக்களின் விழிப்புணர்வு மற்றும் அக்கறையினால் மட்டுமே தொற்றுநோயின் உண்மையான பரவலைத் தவிர்க்க முடியும்.
நாட்டில் 90 விழுக்காடு மக்கள் முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம் என்பதை அறிந்திருந்தாலும், 44 விழுக்காடு மக்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மையில் கவலைக்குரியது. முகக்கவசம் அணிவதால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்றும், நாம் உடல் ரீதியான தூரத்தைப் பின்பற்றி வருவதால் முகக்கவசம் தேவையில்லை என்பதும் கோவிட் தொற்றுக்கு அழைப்பு விடுப்பது மட்டுமன்றி, அது பொதுமக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுவதை போன்றது.
கோவிட் தொற்று எப்போது கட்டுப்படுத்தப்படும்? என்பது தான் இன்று மக்கள் மனதில் எழும் கேள்வியாக உள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான இந்தியா, கோவிட் மருந்து உற்பத்தி மற்றும் விநியோக திறன் மூலம் அனைத்து நாடுகளையும் சென்றடையும் என்றும் அவற்றில் அந்தந்த நாடுகளுக்கு குளிர் சேமிப்பகங்களின் திறனை அதிகரிக்க உறுதி அளித்துள்ளதாவும் சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.