நாடு தழுவிய ஊரடங்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பூசி போடுவதை மிகப்பெரிய அளவில் மேற்கொண்டால் மட்டுமே இந்தியா இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர் அந்தோனி ஃபவுசி கூறியுள்ளார். ஒவ்வொரு மாநிலமும் ஊரடங்கு உத்தரவு போன்ற தடைகளை விதித்து அதனை பின்பற்றி வரும் போதும் இந்த தொற்று நோய் கட்டுக்குள் வர மறுக்கிறது. தடுப்பூசி கிடைப்பது குறித்து எந்த தெளிவான அறிகுறியும் இல்லை என்பதால், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதாக மத்திய அரசு அறிவித்திருந்த 'தடுப்பூசி திட்டம்' கைநழுவி போய்விட்டது.
தற்போதைய வேகத்தில், நாடு முழுவதும் தடுப்பூசி போட மூன்று ஆண்டுகள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் வைரஸ் ஆபத்தான பிறழ்வுகளுக்கு உட்பட்டு, தடுப்பூசிக்கு எதிராக செயல்படலாம் என்ற திகிலூட்டும் மதிப்பீடுகள் வெளிப்படுத்துகின்றன. விசித்திரமானவராக அறியப்பட்ட போதிலும், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக 2000 கோடி அமெரிக்க டாலர்களை ஒதுக்கியிருந்தார். அந்த ஒரே செயலின் காரணமாக அமெரிக்கா இன்று ஒரு உறுதியான சூழ்நிலையில் உள்ளது.
அதனுடன் ஒப்பிடுகையில், கோவிட் -19 தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக இந்திய அரசு அறிவித்தது, ஆனால் உண்மையில் அந்த தொகையில் 14 விழுக்காடு மட்டுமே செலவிடப்பட்டது. கூட்டாட்சி தத்துவம் என்ற பெயரில், இப்போது தடுப்பூசி வாங்குவதற்கான செலவில் 50 விழுக்காட்டை மாநிலங்களை ஏற்க சொல்லியுள்ளது மத்திய அரசு. இவற்றின் விளைவாக, நாட்டின் மக்கள் தொகையில் 3 விழுக்காடு பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட முடிகிறது. உலகில் பெரும்பான்மையான நாடுகள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி அளித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு டோஸுக்கு ரூ.700 முதல் ரூ.1500 வரை விலை உள்ள தனியார் தடுப்பூசிகளை இந்திய அரசு நாடுகிறது. இதுபோன்ற பொருத்தமற்ற தடுப்பூசி கொள்கையை பின்பற்றும் அதே வேளையில், இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மத்திய அரசு கூறுவது நியாயமற்றது.