கோவிட்-19 சூழ்நிலை காரணமாக, தேர்தல் ஆணையம் எல்லா அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை செய்தபின்பு, வேட்புமனுத் தாக்கல், பரப்புரை செய்தல், வாக்கெடுப்பு நடத்தல் ஆகியவற்றைப் பற்றிய வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 1,000-க்கும் குறைவான வாக்காளர்களை மட்டுமே தேர்தல் ஆணையம் அனுமதித்து இருக்கிறது.
அதனால் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பிகார் தேர்தலின்போது கோவிட் விதிகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டன. அதே மாதிரியான விதிகள் மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களிலும் அனுசரிக்கப்படும்.
வெவ்வேறான பொறுப்புகள் உண்டு
மத்திய தேர்தல் ஆணையம், மாநிலங்களின் தேர்தல் ஆணையம், மற்றும் அலுவலர்களின் ஒருங்கிணைப்பைப் பற்றிப் பேசும்போது, ராவட் பின்வரும் தகவலைச் சொன்னார்:
இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் சாசனம் பிரிவு 324இன் கீழ் உருவாக்கப்பட்டது. ஆனால் மாநில தேர்தல் ஆணையம் என்பது பிற்காலத்தில் அரசியல் சட்டத்திருத்தம் செய்தபின்பு உருவாக்கப்பட்டது. இரண்டு அமைப்புகளுக்கும் வெவ்வேறான பொறுப்புகள் உண்டு; அவை ஒன்றோடு ஒன்று கலக்கக் கூடியவை அல்ல.
மாநிலங்களில் இருக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பது. மாநிலங்களில் தேர்தல் நடத்தும் பணி அவர்களைச் சார்ந்தது. அதைப் போல, மாவட்டங்களில் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் இருப்பார்கள்; அவர்களுக்குக் கீழே சப் டிவிசனல் மேஜிஸ்ட்ரேட்கள் (எஸ்டிஎம்) பணிபுரிவார்கள்.
இந்த முழுக் கட்டமைப்பும் அரசு அலுவலர்களால் நிரம்பியது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், ஒவ்வொரு மட்டத்து அலுவலர்கள் தேர்தல் பணியை முடுக்கிவிடுவார்கள். தரமேம்பாட்டு சீர்திருத்தங்கள் பற்றியும், புலம்பெயர் தொழிலாளிகளுக்கான வாக்குரிமை பற்றியும் பேசும்போது, புலம்பெயர் தொழிலாளிகளுக்கும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் மின்வாக்கு (e-vote) வசதி அளிப்பது தொடர்பாக, தேர்தல் ஆணையம் அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது என்றார் ராவட்.
தங்களின் குற்றப் பதிவேட்டை வேட்பாளர்கள் வெளியிடுவது பற்றிப் பேசும்போது, இந்த விதி பிகாரில் கடைப்பிடிக்கப்பட்டது என்றாலும், அது முதல் தடவை அல்ல என்றார் ராவட். முன்பே உச்ச நீதிமன்றம் இது சம்பந்தமாக ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அரசியலிலிருந்து குற்றவாளிகளைக் களைந்தெடுக்கும் உயர் நோக்கோடுதான் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது.
தேர்தல் வாக்கு எந்திரங்களை (ஈவிஎம்) கவனிப்பதில் துணைத் தேர்தல் ஆணையர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. ஏனென்றால் நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டியது அவர்கள்தான். அரசியல் கட்சிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அவர்கள் எல்லாவற்றையும் சொல்லியாக வேண்டும். இந்த மாதிரியான சூழலில், அந்த அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்குச் சிபாரிசு செய்திருக்கிறது. அரசும் அதை ஏற்றுக்கொண்டு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.