சமீபத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பசுமை வரியும், தானாக பழைய வாகனங்களை நீக்கும் திட்டமும் மோட்டார் வாகன வாடிக்கையாளர்களுக்கு ஓர் உந்துசக்தியாக இருக்கும்; அவர்களின் ஆகப்பழையதான, இனியும் ஓட்டுவதற்கு தகுதியற்ற வண்டிகளை ஒழித்துக் கட்டிவிட்டு எரிபொருள் பயன்பாட்டுத் திறன்கொண்ட புதிய வண்டிகளை அவர்களை வாங்க வைக்கும் திட்டம் அது என்று கூறினார் மோட்டார்வாகன விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அஸோசியேஸன் – எஃப்ஏடிஏ) தலைவர் விங்கேஷ் குலாடி.
ஈடிவி பாரத்துடன் பட்ஜெட் திட்டங்களைப் பற்றிய தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட குலாடி இப்படிச் சொன்னார்: மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்திருந்த பசுமை வரியும், தானாக முன்வந்து பழைய வாகனங்களை ஒழித்துவிடும் திட்டமும் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கிய சமீபத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுவிட்டன. அந்தத் திட்டங்களை ‘சாம-தண்ட’ (கேரட் அண்ட் ஸ்டிக்) கொள்கை எனலாம். தாஜாப் பண்ணுதல்; பலிக்கவில்லை என்றால் தண்டித்தல் ஆகிய அம்சங்களைக் கொண்ட அந்தக் கொள்கை, மோட்டார் வாகனத் தொழில் முழுமைக்கும் பெரும் நன்மையை உத்தரவாதமளிக்கக் கூடியது.
“மக்கள் வண்டி வாங்கிய முதல் ஐந்து வருடங்களுக்கு மட்டுமே அதைப் பற்றி ரொம்ப சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். பேணிக்காப்பார்கள். மிக ஆர்வமாக, கவனமாக அதை ஓட்டுவார்கள். இதுதான் நம் அனுபவம். ஆனால் மோட்டார் வண்டியை நன்றாகப் பேணிக் காக்காமல் விட்டால், அது மாசுத் தீமையை அதிகரிப்பதோடு நில்லாமல், தனது ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடும் என்பதை நாம் புரிந்து கொள்வது நல்லது. இருபது வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட ஒரு வண்டி இன்றைய காலக்கட்டத்து மோட்டார் வண்டிகளைப் போல பாதுகாப்பு விதிகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டது அல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்,” என்றார் அவர்.
”அதனால் எங்கள் கூட்டமைப்பான எஃப்ஏடிஏ-யின் கருத்து இதுதான்: சாமம் (கேரட்), தண்டம் (ஸ்டிக்) ஆகியவற்றைப் பயன்படுத்தித்தான் ஆகவேண்டும். நீங்கள் அதரப்பழசான வண்டியை இன்னும் ஓட்டிக் கொண்டிருந்தால், பசுமை வரியைக் கட்டுங்கள். இதுதான் உங்களுக்குத் தண்டம்; அதாவது தண்டனை. அதாவது ஸ்டிக். பழைய வண்டியை மாற்ற விரும்பினால், அதை ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்குங்கள்,” என்று சொன்ன குலாடி மேலும் பின்வருமாறு சொன்னார்.
கடந்த ஜனவரி 25-ஆம் தேதி அன்று, மத்திய அரசாங்கம், எட்டு வருடங்களுக்கும் மேலான போக்குவரத்து வண்டிகளுக்கும், பதினைந்து வருடங்களுக்கும் மேலான சொந்த வண்டிகளுக்கும் சாலை வரியில் 25 விழுக்காட்டை கூடுதல் பசுமை வரியாகச் செலுத்தும் திட்டத்தை முன்மொழிந்தது.
குறிப்பாக, உயர்மாசு மாநகரங்களில் பதிவு செய்யப்பட்ட வண்டிகளுக்கு சாலைவரியில் 50 விழுக்காட்டை கூடுதல் பசுமை வரியாகத் திணிக்கப்படலாம். எனினும், மின்சார வண்டிகளுக்கும், மாற்று எரிபொருள்களான சிஎன்ஜி, எல்பிஜி, எத்தனால் போன்றவற்றைப் பயன்படுத்தும் வண்டிகளுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படலாம்.
இதற்கிடையில், தானாக முன்வந்து பழைய வாகனங்களை ஒழிக்கும் திட்டத்தின்படி, இருபது வயதான சொந்த வண்டிகளுக்கும், பதினைந்து வயதான வணிக வண்டிகளுக்கும் தானியங்கி தகுதி நிலையங்களில் தகுதிப் பரிசோதனைகள் நடத்தப்படும்.
வருடங்களா இல்லை கிலோமீட்டரா எது சரியான அளவுகோல்?