கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியால் பரவும் கரோனா தீநுண்மி தொற்று தற்போது உலக நாடுகளைப் பெரும்பாடு படுத்திவருகிறது. இந்தத் தீநுண்மி தொற்று காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். இந்தத் தீநுண்மி எங்கிருந்து தோன்றியது? எப்படி மனிதர்களுக்குப் பரவியது? இரவு நேரங்களில் உலாவரும் வௌவால்களிலிருந்து இந்தத் தீநுண்மி தொற்று பரவியது என்ற நமது கருத்து சரியானதா?
வௌவால்களின் நலன் குறித்து வலியுறுத்திவரும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்தக் கருத்து உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று தொடர்ந்து மறுத்துவருகின்றனர். கோவிட்-19 தீநுண்மி பரவ வௌவால்கள்தான் காரணம் என்று பரவும் கருத்து தவறானது என்றும் அவர்கள் தெரிவித்தனர். கரோனா தீநுண்மியைப் பரப்பியது வௌவால்கள்தான் என்ற பொய் பரப்புரைகளால் வௌவால் இனத்தையும் மனிதர்கள் அழிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 64 ஆய்வாளர்கள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஹைதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சீனிவாஸ், கரோனா தீநுண்மியை வௌவால்கள் பரப்பவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எனவே, வௌவால்களின் இருப்பிடங்களில் தீவைத்தும் பட்டாசுகளைக் கொளுத்தியும் அவற்றைக் கொல்வது நல்ல முடிவு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வௌவால்களின் கரோனாதீநுண்மிகோவிட்-19 தொற்றும் ஒன்றல்ல
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தினரின் சமீபத்திய ஆய்வுகளில் வௌவால்களிடம் இரு வேறு வகையான கரோனா தீநுண்மி இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆய்வாளர் அரிஞ்சய் பானர்ஜி கூறுகையில், “காட்டு விலங்குகளின் வாழ்விடங்களில் மனிதர்கள் ஊடுருவல் அதிகரிக்க அதிகரிக்க, மனிதர்களுக்குப் புதிய தீநுண்மி தொற்று ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமாகும்.