ஹைதராபாத்:கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில் வெளியான நிலையில், பட்டியலில் பெயர் இல்லாத அதிருப்தியில், கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியில் சேரவோ அல்லது சுயேட்சையாக போட்டியிடவோ பாஜக தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். இது கடந்த ஆண்டு நடந்த ஹிமாச்சலப்பிரதேச தேர்தலையும், அதில் பாஜக தோல்வி அடைந்ததையும் நினைவுபடுத்துவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஹிமாச்சலப்பிரதேச தேர்தலின் போது பாஜகவுக்கு ஏற்பட்ட அனுபவம், வரும் மே 10ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடகா தேர்தலில் மீண்டும் நிகழுமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களிலான தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள அந்த மாநிலங்களோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் கர்நாடகாவை கைப்பற்றுவது பாஜகவுக்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
கர்நாடகாவில் தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதனால் தான் கட்சி விலகலைத் தவிர்க்க வேட்பாளர் பட்டியலை அந்த கட்சி தாமதப்படுத்தியது. மேலும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் கட்சியின் கடைக் கோடி தொண்டர்களையும் ஈடுபட வைப்பதற்கான யுக்தியை பாஜக கையாண்டது.
இதன் மூலம் வேட்பாளர் கடைக் கோடி தொண்டரிடம் பெற்று உள்ள செல்வாக்கை உறுதிபடுத்த முடியும் என்றும் ஆர்வம் உள்ள தலைவர்களை உருவாக்க முடியும் என பாஜக நினைத்தது. அதன் காரணமாகவே 224 தொகுதியில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களை கொண்டு ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மூன்று சிறந்த வேட்பாளர்களை முன்மொழியுமாறு பாஜக தலைமை கேட்டுக்கொண்டது.
அப்படி கூறப்படும் 3 சிறந்த வேட்பாளர்களில் ஒருவரை பாஜக தேர்ந்தெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பாஜக மேலிடத் தலைவர்கள் நான்கு நாட்கள் தொடர் ஆலோசனை நடத்தி வேட்பாளர் பட்டியல் குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். மேலும் தலைமையில் இருந்து முடிவு எடுக்கப்படாமல் களத்தில் உள்ள கட்சித் தொண்டர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாஜக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதை மாநிலத்தின் கடைக் கோடி தொண்டனுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பாஜக இந்த யுக்தியை கையாண்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், மாநிலத்தின் தலைமையை டெல்லியின் மேல் மட்டம் தீர்மானித்ததாக கூறப்பட்டது. அது மாநில தலைமையில் பெரும் பிளவை ஏற்படுத்தியது. அதை வெளிப்படையாக கூறும் வகையில் இமாச்சல பிரதேசத்தின் பாஜக தலைவர்களில் ஒருவரான வந்தனா குலேரியா கருத்துகளும் வெளிப்படுத்தியது
தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை தொடர்ந்து வந்தனா குலேரியா, டெல்லியில் இருந்து பட்டியல் வேண்டுமானால் வரலாம், ஆனால் அந்தந்த மாநிலத்தில் தான் வாக்குகள் செலுத்தப்பட வேண்டும் என்று கிண்டலாகக் கூறியது மாநில அரசில், கட்சியின் மேல் மட்டத்தின் தலையீடு எந்த அளவுக்கு இருந்தது என்பதை அப்பட்டமாக பிரதிபலித்தது.
கர்நாடகாவில் பாஜகவின் முதல் இரண்டு வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், வேட்பாளர் தேர்வில் தங்களது பெயர்கள் இல்லாததை கண்டு சிலர் கோபமடைந்தனர். அதன் விளைவே எதிர்க் கட்சிகளை நோக்கி செல்வதும், சுயேட்சைகளாக போட்டியிட திட்டமிடுவது உள்ளிட்ட பணிகள் அரங்கேறின.
வாய்ப்பு கிடைக்காதவர்களை ஏளனப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மாநிலத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை ஆட்டம் காணும் ஆபத்தை ஏற்படுத்துக் கூடும். பாஜகவின் வேட்பாளர் பட்டியலால் 20 முதல் 30 பேர் அதிருப்தி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த தொகுதியில் பாஜகவுக்கு அவர்களே ஆபத்தாக கூட அமையக் கூடும் என கருதப்படுகிறது.
அந்த வகையில் லிங்காயத் சமூகத்தின் தலைவர்களான ஜெகதீஷ் ஷட்டர் மற்றும் லக்சமண் சவாதி உள்ளிட்டோர் பாஜகவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். மாநிலத்தில் 17 சதவீத வாக்குகளைப் கொண்டு சமூகத்தின் மீது அதிகப்படியான செல்வாக்கை இருவரும் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.