தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

உயிருக்கு அரணாய் உலகை ஆளும் தண்ணீர்! - world water day

உயிர்கள் அனைத்தும் உயிர் வாழ சுவாசிக்கும் காற்றும், உண்ணும் உணவும் எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு நமது தாகத்தை தீர்க்கும் தண்ணீரும் முக்கியம். இந்தத் தண்ணீர் நமது தாகத்தை தணிப்பது மட்டுமின்றி நமக்கு வேறு பல வகைகளிலும் உதவுகிறது. எனவே இதன் தேவை குறித்து உணர உலக தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

உலக தண்ணீர் தினம்

By

Published : Mar 22, 2019, 8:26 AM IST

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும் என்ற வள்ளுவனின் எழுத்தாணியில் செதுக்கப்பட்டது அப்பட்டமான உண்மை.

நீர் எனும் அமுதம் பெரும்பாலான பொருட்களின் தயாரிப்பில் மிக முக்கியமான மூலப்பொருளாகும். பெருகிவரும் மக்கள் தொகை என்பது ஒருபுறமிருக்க, தொழில் புரட்சியினால் மழைநீரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகமாகிவருவதால் தண்ணீர் சேமிப்பு அல்லது பாதுகாப்பு என்பது இன்றைய அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. மூன்றாம் உலகப்போர் மூள்வதாக இருந்தால் அது இந்த நீல தங்கத்திற்காகத்தான் இருக்கும்.

மனிதனின் உடலிலும் 75 விழுக்காடு நீர்தான் உள்ளது. நம் உணவில் உள்ள சத்துகளை உடலில் உள்ள உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லவும், கழிவை கழிவு சேகரிக்கும் உறுப்புகளுக்கு அனுப்பவும் நீர் அவசியமாகிறது. ஒரு மனிதனின் உடலில் 42 லிட்டர் தண்ணீர் உள்ளது. அதில் 2.7 லிட்டர் என்னும் மிகச் சிறிய அளவு குறைந்தாலும் உடலில் எரிச்சல், நடுக்கம், தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படும். அதுபோல நம் சுற்றுப்புறம் தூய்மையாக அமையவும் நீர் அவசியமாகிறது.

நமது உடலின் உறுப்புகள் சீராகச் செயல்பட ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள ஒவ்வொரு இயக்கத்திற்கான பணியையும் சிறப்பாகச் செய்து முடிக்கத் தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது.

நீரை சிக்கனமாக ஆள்வது மட்டும் நம் கடமையல்ல நீரதாரத்தைப் பெருக்குவதும் நம் கையில்தான் உள்ளது. அதற்கு நம்மால் இயன்றளவு வீட்டிற்கு ஒரு மரத்தை நட்டு வைப்போம். ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தினை கடைபிடிப்போம். இயன்றளவு நீர் நிலைகளைப் பாதுகாப்போம்.

உலக தண்ணீர் தினம்

நீரின் உபயோகத்தைக் குறைத்து மறுசுழற்சி முறையில் தேவையற்ற நீரை தயாரிப்புக்கும், சுத்தம் செய்வதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவோம்.நெகிழிப் பொருட்களைப் புறக்கணிப்போம். தென்னை பனையோலைப் பொருட்களையும், மண்பாண்டம், வெள்ளி பாத்திரங்களையும் உபயோகிப்போம். காய்கறி கழிவுகளை உரமாக்குவோம். மக்கும் குப்பைகளையும் மக்காத குப்பைகளையும் தரம் பிரித்துப் போடுவோம்.

குழந்தைகளிடம் நீரின் அத்தியாவசியத்தையும், அதைப் பயன்படுத்தும் முறையையும், பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும். இன்றே உணர்த்த ஆரம்பிப்போம். கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஆறுகள் மூடப்பட்டு மனித குடியிருப்புகளாய் மாறிவரும் இவ்வேளையில் நம் வருங்கால சந்ததியினர் இவற்றையெல்லாம் (கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஆறுகள்) வெறும் புகைப்படங்களாக மட்டுமே பார்க்க வேண்டிய அபாயம் ஏற்படும்.

நீர் சேமிப்பு முறை என்பது ஊர் திருவிழா போல வருடத்திற்கு ஒரு சில நாட்கள் என வழக்கமாக இல்லாமல், தினம் கடைபிடிக்க வேண்டிய பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இயற்கையின் ஒவ்வொரு அசைவும் ஒரு சமிக்ஞை. அதைச் சரியாகப் புரிந்துகொள்ளும் நாம் தவறிவிட்டோம். இன்று உள்ள இந்த அபாயகரமான சூழ்நிலை ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. சிறிது சிறிதாகச் சேர்ந்து பூதாகரமாக மாறி நம்மை அச்சுறுத்திவருகிறது. அதை மாற்றும் சக்தியும், திறமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது. அதற்கான முயற்சியை இன்றே தொடங்குவோம்.

தினமும் ஒரு சில துளிகளாவது தண்ணீரைச் சேமிப்போம். சிறுதுளியே பெரும் வெள்ளமாகும் விரைவில்...!

ஊர் கூடித் தேர் இழுப்போம்! மழை நீரைச் சேகரிப்போம்! நம் மண்ணின் வளத்தைப் பாதுகாப்போம் ! மழைநீர் நம் ஒவ்வொருவரின் உயிர்நீர்!

ABOUT THE AUTHOR

...view details