தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

உலக சூழலின் உறைவிடமான 'காடுகள்'! எங்கும் எதிலும் வஞ்சமில்லை... - save forest

காடுகள்...! ஆம் சொர்க்கத்தின் உறைவிடம். எங்கும் எதிலும் வஞ்சமில்லை... எதற்கும் கோபமில்லை. தான்கொண்ட செயல்பாடுகளில் அவ்வளவு நாட்டம். எதையும் எப்போதும் எதிர்பார்க்காமல் தன்நின்ற அறனாய் விளங்கும் காடுகள் தினம் இன்று.

காடுகள்

By

Published : Mar 21, 2019, 9:45 AM IST

பருவம் தப்பாத காலநிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ஆம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து கூறப்படுகிறது.

காடுகள் என்றால் என்ன?

மனிதன் வாழ ஆக தகுதியான சூழலை உருவாக்கித் தருவது காடுகள். வளம், செழிப்பு என பசுமை கண்களை விரிவடையச் செய்வதும் காடுகள்தான். காடுகள் எங்கும் எதற்கும் சமரசம் செய்ததில்லை. தன்னில் உள்ள பல ஆயிரம் உயிரினங்களுக்கு உறைவிடமாகத் திகழ்கிறது .பல்லுயிரினங்கள், வழிந்தோடும் நீரோடைகள், வீறிட்டுக் கொட்டும் அருவிகள், நற்சூழல் தரும் மூலிகைகள், நிழலாடும் மரங்கள் என சொர்க்கபுரியாய் காடுகள் திகழ்கின்றன. மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்றும் அழைக்கப்படுகின்றது.

காடுகள்

உயிரினங்களின் உறவிடமாய் திகழம் காடுகள்:

உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன. காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும். வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50% உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன.

உலக நிலப்பரப்பில் 30 விழுக்காடு அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன. நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனித சமுதாயத்துக்கு பல வழிகளிலும் தாவரங்கள் நன்மை தருகின்றன.

காடுகளை அழிப்பதால் மனித குலம் மட்டுமல்ல ஜீவராசிகள் அனைத்துக்கம் பேராபத்து!

தற்கால பெருநிறுவன ஆதிக்க சூழலால்பல வழிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படப்போகும் ஆபத்துகள் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மனித இனம் அதன் வரலாற்றில் சந்தித்துள்ள நெருக்கடியான பிரச்னைகளில் இதுவரை சந்திக்காதது புவி வெப்பமடைதலால் ஏற்படும் பல்வேறு அழிவுகள்.

காடுகள்

இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வோம்...!

முக்கியமாக காடுகளை அழிப்பதை நிறுத்துவது, புதிதாக அதிக மரங்களை வளர்ப்பது மூலம்தான் புவி வெப்பம் அடைதலை தடுக்க முடியும். வனம் என்பது காட்டு விலங்குகளுக்கு உரியது. அங்குள்ள மரங்களை நாம் வெட்டி விடுவதால் மழை குறைந்துவிடுகிறது. இதனால், விலங்குகள் உணவு, தண்ணீருக்காக நகருக்குள் நுழைந்து விடுகின்றன.

நம் நாட்டில் சுமார் 24% நிலப்பரப்பு காடுகளாலும், மரங்களாலும் சூழப்பட்டிருக்கின்றன. சுமார் 2.2 கோடி பேர் வன நிர்வாகத்தில் பங்கேற்றுள்ளார்கள். சுமார் 100 தேசிய பூங்காக்கள், 515 வன விலங்கு சரணாயலங்கள் இருக்கின்றன.

காடுகளை காப்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை என்பதும், பல்லுயிர் பெருகும் இடத்தில் நகரங்களில் வாழும் மனித இனமும், பெரு நிறுவனங்களும் நுழையாமல் இருந்தாலே காடுகள் தங்களை பாதுகாத்து கொண்டு மனித இனத்திற்கு வேண்டியதை தானாக முன்வந்து செய்யும் என்பது சூழலியல் ஆர்வலர்களின் கருத்தாக அமைகிறது.

’இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வோம்’

ABOUT THE AUTHOR

...view details