இருவருக்குள்ளுமான தொடர்பு
ஆங்கிலத்தில் கம்யூனிக்கேஷன் எனப்படும் தொடர்பியல் கணவன் மனைவி இருவருக்குமே இருத்தல் நல்லது. அன்றாடம் தொடர்பில் கணவன் மனைவி இருவரும் இருந்தால் இருவருக்குமான உணர்வுகள் சம அளவில்தான் இருக்கிறதா? என தெரிந்துகொள்ள முடியும். இந்தத் தொடர்பியல் முறை கணவன் மனைவிக்குள் இருந்தால், இருவரின் அன்பும் தொடர்ந்து நீடிக்கும்.
பாராட்டு
ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பு ஒளிவு மறைவற்றதாய் இருக்கவேண்டும். மறைத்து வைக்கப்படும் அன்பினால் ஒரு பயனும் கிடையாது. இதனால் தம்பதிக்குள் கருத்துவேறுபாடே நிலவும்.
அன்றாடம் உன்னை நான் அன்பு செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் சளிப்பு தட்டிவிடும். இதனை சமன்படுத்த ஒருவரை ஒருவர் சிறு சிறு விஷயங்களுக்காக பாராட்டிக்கொள்ள வேண்டும்.
நீ எனக்கு கிடைத்ததில் நான் எவ்வளவு பெரிய அதிருஷ்டசாலி என்று மற்றவரை உணரவைக்கும் நொடியே அலாதியானதுதான். இதனை உணர்த்த வார்த்தைகளாலும் முடியும். நம்முடன் தானே தினமும் இருக்கிறாள்/ இருக்கிறான் என்று மற்றவரை அலட்சியப்படுத்துவது நிச்சயம் ஒரு உறவை மகிழ்ச்சிகரமானதாக வைத்துக்கொள்ளாது. சிறு விஷயங்களுக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளுங்கள்- அதுதானே மற்றவருக்கும் வேண்டும்?
சமரசம் ரொம்ப முக்கியம் பாஸ்!
உங்களுக்குள் பிரச்னை இருந்தால் சமரசம் செய்துகொள்ளுங்கள் கணவன் மனைவியரே. நான் ஏன் இறங்கி போக வேண்டும் என்ற நினைப்பை குப்பையில் போடுங்கள். யாரேனும் ஒருவர் தனது ஈகோவை விட்டுவிட்டு சமரசம் செய்யமுன்வந்தால், அதுவே ஆரோக்கியமான இல்லற உறவுக்கு வித்திடும். இது மிகவும் முக்கியம்.
இருவருக்குள்ளும் சிறு விஷயத்துக்கோ, பெரிய விஷயத்துக்கோ சமரசம் இருந்தால் மட்டுமே இல்லத்தில் மகிழ்ச்சி இருக்கும். இதனால் தம்பதி இருவரும் இணைந்து வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தில் நல்ல முடிவுகளைச் சேர்ந்து எடுக்கமுடியும்.
அடிக்கடி சண்டையா? விட்டுத்தள்ளுங்க...
வீடு என்றால் சண்டை இருக்கத்தான் செய்யும். அது கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, ரத்த பந்தமாக இருந்தாலும் சரி, காதலர்களாக இருந்தாலும் சரி. எந்த சூழ்நிலையிலும் கருத்துவேறுபாடு இருப்பது சாதாரணம்தான்.
ஆரோக்கியமான தம்பதி சண்டை என்பது முடிவு கிடையாது என்று நன்கு அறிந்திருப்பார்கள். அவர்களால் சண்டையை கடந்தும் காதலிக்கமுடியும். சில மாற்ற முடியாத விஷயங்களை (சீரியஸான பிரச்னையாக இல்லாவிட்டால்) அதனை அதன் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். அல்லது பேசி தீர்த்துவிட வேண்டும். அதையே பிடித்துக்கொண்டு உறவில் பிளவு ஏற்படுத்துவதோ, அல்லது உறவை முறித்துகொள்வதோ இருவருக்குமே மனமுடைதலை ஏற்படுத்தும். உறவை காப்பதைவிட நமது பிரச்னை ஒன்றும் பெரிதில்லையே!
நீங்கள் நீங்களாய் இருங்கள்
உங்கள் கடந்த காலம் எப்படிபட்டதாய் வேண்டுமானாலும் இருக்கட்டும். உங்களுக்குள் ஆயிரம் குற்றம் குறைகள் இருக்கட்டும். உங்களை உங்கள் குற்றம் குறைகளோடே ஏற்றுக்கொள்ளும் கணவன் மனைவி கிடைப்பது வரம்தான்.
ஒருவேளை உங்கள் கணவன்/மனைவியிடம் ஏதாவது குறை இருந்தால் நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள். அவரை அவராக இருக்கவிடுங்கள். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். இதுவே ஆரோக்கியமான குடும்பத்துக்கு அச்சாணி.
கசப்பான நாள்களும் நன்மைக்கே
நீங்கள் என்ன மாதிரியான சூழ்நிலையில் இருந்தாலும், உங்கள் நாள் எப்படி இருந்தாலும், உங்களது கணவன் அல்லது மனைவி அருகாமையில் இருக்கும்போது நீங்கள் பாதுகாப்பாய் உணரமுடியும். மற்றவரையும் உணரவைக்க வேண்டும். அவரது மோசமான நாளில் நீங்கள் அவருடன் இருப்பது மிகவும் அவசியம்.
கடந்து செல்லுதல், ஏற்றுக்கொள்ளுதல், புரிந்துகொள்ளுதல் இவையும் ஆரோக்கியமான தம்பதிக்கு வேண்டும். இதைதாண்டி, வீட்டை நிர்வகிக்க இருவரும் ஆண், பெண் வேற்றுமையின்றி ஒன்றாய் இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும். மற்றபடி இயல்பாய் நடக்கும் கரண்டிச் சண்டைகளை சமாளிக்க நம்மிடம் டிப்ஸ் இல்லை பாஸு. ஏன் கடல்லயே இல்லயாம்!
இதையும் படிங்க:முதுமையில் கொல்லும் தனிமை: வயதானவர்களை கவனித்துக்கொள்ளுவது ஏன் முக்கியம்?