டெல்லி: மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கோவிட்-19 தொற்றைக் கண்டறிய விரைவான ரேபிட் சோதனைக் கருவிகளை தற்போதைக்கு பயன்படுத்தவேண்டாம் எனவும், அதன் துல்லியத்தைத் தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
மிக விரைவில் கரோனா நோய்க் கிருமித் தொற்றை அறியக்கூடிய, ரேபிட் டெஸ்ட் கருவியை சீனா அறிமுகப்படுத்தியது. பரிசோதனைப் பணி வெகு தாமதமாக நடைபெறுவதால், கோவிட்-19 தொற்றின் உண்மை நிலையை அறிய முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.
அரியவகை பாம்பே ரத்தம் கிடைக்காமல் தவித்த கர்ப்பிணிக்கு உதவிய காவலர்!
சீனா அறிமுகப்படுத்திய இந்தக் கருவி, அந்தக் குறையைப் போக்கவல்லது என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் ஏற்பட்டது. இதனால், அனைத்து நாடுகளும் போட்டிபோட்டுக் கொண்டு இதனை வாங்கியது. இந்தியாவும் இதனைப் பெருமளவில் வாங்கியது.
முதலில் இது குறித்து சரியான விழிப்பில்லாமல் இருந்த அரசு, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் இந்த ரேபிட் டெஸ்ட் கருவியில் கோளாறு இருப்பதாகவும், இதன் சோதனை முடிவுகள் தெளிவாக இல்லை எனவும் சொன்னதைத் தொடர்ந்து சற்று சுதாரித்தது.
எக்ஸ்-ரே மூலம் கரோனாவைக் கண்டறியும் மென்பொருள் கண்டுபிடிப்பு!
இதனையடுத்து வேறு சில மாநிலங்களும் இதே புகாரைத் தெரிவித்தன. மேலும் புனேவில் உள்ள நுண்கிருமி ஆராய்ச்சிக் கழகம், பரிசோதனை செய்யாமல் இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகள் மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டதாகவும், இது சரியான நடைமுறையாக இருக்காது எனவும் எதிர்ப்பைத் தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கோவிட்-19 தொற்றைக் கண்டறிய விரைவான ரேபிட் சோதனைக் கருவிகளை, தற்போதைக்கு பயன்படுத்தவேண்டாம் எனவும், அதன் துல்லியத்தை தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும், அதன் முடிவில் சோதனைக் கருவிகளை பயன்படுத்தலாமா? வேண்டாமா? என பரிந்துரைப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.