கரோனா தொற்று காலத்தில் நாம் மிகவும் பாதுகாப்பாக இருப்பதோடு சத்தான ஆகாரங்களை உண்பதும் மிக அவசியம். நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நபரால் மட்டுமே கரோனாவை எதிர்த்து போராடி வெல்ல முடியும். குறிப்பாக கரோனா அசுர வேகத்தில் பரவி வரும் இதுபோன்ற நாள்களில் உடல்நலனை காப்பதில் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டியது முக்கியம்.
நீங்கள் உண்ணும் உணவு, குடிக்கும் பானம் ஒவ்வொன்றும் உங்கள் உடலின் ஊட்டச்சத்தை தீர்மானிப்பதற்கு பெரும் பங்காற்றிவருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் போன்றவை கரோனா தொற்று காலத்தில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து பரிந்துரைகள் செய்துள்ளன.
கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்:
உடலின் செயல்பாடு நாம் எவ்வளவு சத்தான ஆகாரங்களை உட்கொள்கிறோம் என்பதில் அடங்கியுள்ளது. உடலில் சக்தி (energy) இருந்தால் மட்டுமே நம்மால் ஆற்றலுடன் வேலை செய்யமுடியும். அதற்கு கலோரிகளின் பங்கு மிக முக்கியம். கலோரிகள் அதிகம் உள்ள உணவுகள், குறிப்பாக அரிசி சோறு, ப்ரெட், முழு தானியங்கள், தானியங்கள் போன்றவற்றை உணவில் சிறிது அதிகமாக சேர்த்துகொள்ளுங்கள். துரித உணவுகளை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள்.
புரதச்சத்து மிக முக்கியம் பாஸ்:
புரதச்சத்து மிக்க உணவுகளான முழு தானியங்கள், பயறு வகைகள், பால் உணவுகள், பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் யாவும் உங்களுக்கு புரதச் சத்தை அள்ளி அள்ளி கொடுக்கும். இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அசைவ விரும்பிகளாக இருந்தால் முட்டை, மீன், கோழிக் கறி போன்ற மாமிச உணவுகளை உட்கொள்ளுங்கள்.
பழம், காய்கறிகள்:
பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் நார்ச்சத்து, விட்டமின்கள், உடலுக்கு மிக முக்கியத் தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (antioxidants) உள்ளன.