சீன நிறுவனமான சியோமி இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டாகத் திகழ்கிறது. ரெட்மி, எம்.ஐ, போக்கோ ஆகியவற்றை உள்ளடக்கிய சியோமி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சுமார் 30 சதவிகிதத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
என்னதான் சீனாவைச் சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும், சியோமி தனது உற்பத்தியில் பெரும்பாலானவற்றை இந்தியாவில் தான் மேற்கொள்கிறது. இதன் மூலம் வரிகளும் தவிர்க்கப்படுவதால், குறைந்த விலையில் மொபைல்களை சியோமியால் விற்பனை செய்ய முடிகிறது.
இந்நிலையில், சியோமி இந்தியாவின் முதன்மை இயக்க அலுவலர் முரளி கிருஷ்ணன் கூறுகையில், "சியோமி இந்தியாவில் விற்கும் 99 சதவிகித மொபைல்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுபவை. இங்கு நாங்கள் நொடிக்கு மூன்று மொபைல்கள் தயாரித்து வருகிறோம்.
மேலும், இந்தியாவில் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களை வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு குறைந்த அளவில் ஏற்றுமதி செய்கிறோம். மத்திய அரசு இதில் போதிய ஊக்கத்தொகையை அளித்தால், அதிக அளவில் இந்தியாவிலிருந்து தயாரிக்கப்படும் மொபைல்களை ஏற்றுமதி செய்யத் தயாராகவே உள்ளோம்.