ஆண்டுதோறும் ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவில் Moblie World Congress - MWC எனப்படும் சர்வதேச மொபைல் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். சாம்சங், நோக்கியா, சோனி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தங்களது புதிய ஸ்மார்ட்போன்கள் குறித்த அறிவிப்புகளை இந்த நிகழ்வில்தான் வெளியிடுவார்கள். இதன் காரணமாக சர்வதேச அளவில் இந்நிகழ்வு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்தாண்டு வரும் பிப்ரவரி 24 முதல் 27ஆம் தேதி வரை MWC 2020 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக இன்டெல், விவோ, நோக்கியா, சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்தன. முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்ததால், MWC 2020 கண்காட்சியை ரத்து செய்வதாக அந்நிகழ்வை ஒருங்கிணைக்கும் ஜிஎஸ்எம்ஏ(GSMA) அறிவித்துள்ளது.