இந்தியா - சீனா ராணுவங்களுக்கிடையே லடாக் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சீனப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலையும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவன தயாரிப்பைகளை புறக்கணிக்க வேண்டும் என்று குரல் அதிகரித்து வருகிறது. சீன நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்தான் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை இருப்பதால் சீன நிறுவனங்களை புறக்கணிப்பது சாத்தியமில்லை என்ற குரலும் மற்றொரு புறம் எழுந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து கவுன்டர்பாயின்ட் நிறுவனத்தின் சந்தை ஆராய்ச்சிப் பிரிவின் மூத்த ஆய்வாளராக உள்ள பிரச்சீர் சிங் கூறுகையில், "இந்திய ஸ்மார்ட்போன் துறையில், சீன நிறுவனங்களின் ஊடுருவலும் தாக்கமும் மிக அதிகமாக உள்ளது. மிகச் சில நிறுவனங்களால் மட்டுமே இதனை உடைக்க முடியும்.
வாடிக்கையாளர்களுக்கும் தேர்வு செய்வதற்காக அதிக நிறுவனங்கள் இருப்பதில்லை. உதாரணமாக, பட்ஜெட் பிரிவில் சீன நிறுவனங்களாக சியோமி, ரியல்மி ஆகியவற்றில் இருந்துதான் ஸ்மார்ட்போன் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். அதைவிட கொஞ்சம் விலை அதிகமான பிரிவில் மற்ற சீன நிறுவனங்களான ஓப்போ, விவோ ஆகிய நிறுவனங்கள் உள்ளன.