சர்வதேச அளவில், சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மொபைல்போன் பயனாளர்களைக் கொண்ட நாடு இந்தியா. எனவே, இந்திய சந்தையைப் பிடிக்க பல்வேறு நிறுவனங்களும் மிகக் கடுமையாக முயன்று வருகின்றன.
இந்திய மொபைல்போன் சந்தையில் ஒரு காலத்தில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்ந்த சாம்சங் நிறுவனம், ரெட்மி, விவோ, ஓப்போ போன்ற சீன நிறுவனங்களின் வரவால் தடுமாற ஆரம்பித்தது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக சாம்சங் நிறுவனம் தனது திட்டங்களை மாற்றி ஆஃப்லைன், ஆன்லைன் என இரு பிரிவுகளிலும் ஸ்மார்ட்போன் மாடல்களைக் களமிறக்கின.
இந்தப் புதிய செயல்திட்டம் சாம்சங் நிறுவனத்திற்கு நல்ல பலனை அளித்துள்ளது. அத்துடன், தற்போது சீன எதிர்ப்பு மனநிலையும் இந்தியர்களிடையே அதிகரித்துள்ளதால், சாம்சங் நிறுவனத்தின் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
அதன்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த மொபைல்போன் சந்தையில் (ஸ்மார்ட்போன் + ஃபீச்சர் போன்) சீனாவின் சியோமி நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, 21 விழுக்காடு சந்தையை தன்வசப்படுத்தி முதல் இடத்தை பெற்றுள்ளது.