Latest Tech News Tamil: ரியல்மி நிறுவனம் உதயமாகி ஒரு ஆண்டு மட்டுமே ஆன நிலையில், இந்திய மொபைல்ஃபோன் சந்தையில் தனி இடத்தை பிடித்து பிற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக மாறியுள்ளது.
குறிப்பாக சக்திவாய்ந்த பிரசஸர், அதிக கொள்ளளவு கொண்ட பேட்டரி என கேமர்களை (Gamers) குறிவைத்து ஒவ்வொரு மொபைலும் களமிறக்கப்படுவதால் ரியல்மி மொபைலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கூடிவருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் முதல் 64 மெகாபிக்சல் கேமராவை கொண்ட மொபைல் என்ற பெயரைப் பெரும் வகையில் ரெட்மி நிறுவனத்துக்கு முன்னதாகவே ரியல்மி நிறுவனம் நேற்று ரியல்மி XT என்ற புதிய மாடல் ஃபோனை வெளியிட்டுள்ளது. ரியல்மி XT எனபெயரிடப்பட்டிருக்கும் இந்த மொபைல் கேமர்களையும் புகைப்படவிரும்பிகளையும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரியல்மி XTஇன் சிறப்பம்சங்கள்
- 6.4 (1080X2340) இண்ச் சூப்பர் அமோலேட் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர்
- இந்தியாவின் முதல் 64 மெகாபிக்சல் கேமரா
- 64 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் என பின்புறம் நான்கு கேமரா
- முன்புறம் 16 மெகாபிக்சல் வாட்டர் டிராப் செல்ஃபி கேமரா
- 4,000mah பேட்டரி
- கொரில்லா க்ளாஸ் பாதுகாப்பு வசதி
- வூக் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
- நீலம் (Pearl Blue), வெள்ளை (Pearl White) நிறம்
இந்த மொபைல் ஆண்ட்ராய்ட் 9 பை(Pie)யை மையமாக வைத்து ஓப்போ உருவாகியுள்ள கலர் 6 இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. 4GB RAM + 64GB சேமிப்புத் திறனைக்கொண்ட Realme XT ஸ்மார்ட்போன் ரூ.15,999க்கும், 6GB RAM + 64GB சேமிப்பு கொண்ட மொபைல் ரூ.16,999க்கும், 8GB RAM + 128GB சேமிப்பு கொண்ட மொபைல் ரூ.18,999க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த மொபைல்ஃபோன் வரும் திங்கள்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
ரியல்மியின் இந்த மொபைல் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ரெட்மி நோட் 8 ப்ரோ மொபைலுக்கு கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.