சைபர் குற்றங்கள் பல வகை, அதில் தற்போது 'ஜூஸ் ஜேக்கிங்' என்ற புதிய வகை ஹேக்கிங்கும் இணைந்துள்ளது. ஆனால், சிறிது காலத்தில் இந்த சைபர் தாக்குதலுக்கு பலர் பலியாகிவிட்டனர். இதிலிருந்து தப்பிக்க, விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.
மொபைல்போனின் சார்ஜிங் கேபிள் வழியே எப்போது தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வசதி அறமுகப்படுத்தப்பட்டதோ, அப்போது முதல் இதே கேபிள்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட தரவுகளை ஹேக் செய்யும் ஜூஸ் ஜேக்கிங் முறையும் அதிகரித்துவிட்டது.
விமான, பேருந்து, ரயில் நிலையங்கள், மால்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களிலிருக்கும் இலவச சார்ஜிங் நிலையங்களையே இதுபோன்ற ஹேக்கர்கள் குறிவைப்பார்கள். அங்கிருக்கும் USB portகளில், முன்கூட்டியே வைரஸ்களைப் பதிவேற்றி வைத்திருப்பார்கள். அதை நாம் பயன்படுத்தும்போது வைரஸ்களை சார்ஜிங் கேபிள் வழியே ஸ்மார்ட்போனுக்குள் வந்துவிடும்.
இதன் மூலம் வங்கி பாஸ்வேர்டுகள், சமூக வலைத்தள பாஸ்வேர்டுகள் மட்டுமின்றி தனிப்பட்ட புகைப்படங்களும்கூட திருடப்படுகின்றன. ஒரு முறை உங்கள் ஸ்மார்ட்போன்கள் ஹேக் செய்யப்பட்டவுடன், அதன் பாஸ்வோர்டுகளை மாற்றி உங்கள் ஸ்மார்ட்போன்களை நீங்களே பயன்படுத்த முடியாத வகையில் லாக் செய்து உங்களை பிளாக்மெயில் செய்வார்கள்.