கோவிட்-19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வழியில் கல்வி கற்கும் முறைக்கு மாறியுள்ளனர். இருப்பினும் பல மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் பாடம் நடத்த வேண்டிய சூழல் உள்ளதால் அனைவருக்கும் ஆசிரியர்களால் போதிய கவனம் அளிக்க முடிவதில்லை.
இந்நிலையில், ஒரு ஆசிரியர் ஒரு நேரத்தில் ஒரு மாணவருக்கு மட்டுமே பாடம் கற்றுத்தரும் புதிய முயற்சியில் லேனோவா இறங்கியுள்ளது. இதற்காக eVidyaloka என்ற நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்எட் (SmarterEd) என்ற புதிய சேவையை லேனோவா தொடங்கியுள்ளது.
இது குறித்து லேனோவா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகுல் அகர்வால் கூறுகையில், "இந்தச் சேவையை நாங்கள் வர்த்தக நோக்கில் தொடங்கவில்லை. நாடு தற்போது சந்தித்துவரும் நெருக்கடிக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வை அளிக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இதை நாங்கள் தொடங்கியுள்ளோம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைவருக்கும் நம்மால் கல்வியை அளிக்க முடியும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஸ்மார்ட்எட் தளத்தில் மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுத் தர விரும்பும் தன்னார்வலர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். இதில் பாடம் கற்றுத் தர விரும்பும் அனைவரும் ஆசிரியர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவில் வல்லுநர்களாக இருந்தால்போதும்" என்று தெரிவித்தார்.
இந்த ஸ்மார்ட்எட் தளத்தில் மத்திய, மாநில பாடத்திட்டத்தில் ஐந்து முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கப்படும். ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தச் சேவை வழங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: மே மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய லேப்டாப்?