கரோனா தொற்று காரணமாக அமலுக்கு வந்த ஊரடங்கு, பலரை வீடுகளில் முடங்கியிருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியது. இச்சமயத்தைப் பயன்படுத்தி, பலரும் தங்களது பொருள்களை இணைதளத்தில் விற்பனை செய்துவந்தனர். அரசியல்வாதிகளும் தேர்தல் பரப்புரையை இணையதளம் மூலம் மேற்கொண்டுவருகின்றனர்.
ஸ்மார்ட்போன் வருகையால், புத்தகம் படிக்கும் பழக்கம் அறவே குறைந்தது. மக்கள், பலரும் தங்களது நேரத்தை வாட்ஸ்அப், பேஸ்புக் செயலிகளில் செலவிட்டுவந்தனர். தற்போது, அச்செயலிகள்தாம் நமது வாழ்க்கையை நிர்வகித்துவருகின்றன.
தற்போது, ஸ்மார்ட்போன் ஆன்லைன் வகுப்புக்குத் தேவை என்ற நிலைமை வந்ததால், குழந்தைகளும் அதிகளவில் ஆன்லைனில் நேரம் செலவிட்டுவருகின்றனர். இந்த டிஜிட்டல் ஆர்வம் பலரையும் தவறான பாதையில் அழைத்துச் செல்லும் அபாயம் உள்ளது. அதிக நேரம் ஆன்லைனிலே அமரும்போது, உடல் குறித்து சிந்தனை அறவே குறைகிறது. இது உடல் ரீதியான சிக்கலை அவர்களுக்கு ஏற்படுத்தும். டிஜிட்டலில் அதிக நேரம் இருப்பது, குழந்தையின் மனநிலையை எதிர்மறையாகப் பாதிக்கும் என்று உளவியலாளர்கள் கவலைப்படுகிறார்கள்.