கோவிட்-19 வைரஸ் பரவல் தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த காலத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பயன்பாடு 40 முதல் 70 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
அதிகரித்துள்ள இந்த இணைய பயன்பாடு காரணமாக டெலிகாம் நிறுவனங்களும் சமூக வலைதளங்களும் பல தொழில்நுட்ப சிக்கல்களைச் சந்தித்துவருகின்றன. குறிப்பாக, பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலிக்கு இந்தியாவில் மட்டும் 400 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர்.
பெரும்பாலான பயனாளர்கள் தற்போது வாட்ஸ்அப்-இல் வீடியோ ஸ்டேடஸ்களை பதிவிடுவதால், அதைக் கையாள்வதில் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைக் கையாள்வதற்கு ஏற்ப இந்தியாவில் தற்போது வாட்ஸ்அப்-இல் ஸ்டேடஸ்களுக்கான நீளம் 30 விநாடிகளிலிருந்து 15 விநாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஒரு வீடியோவில் தங்கள் விரும்பிய 15 விநாடிகளை மட்டுமே ஸ்டேட்டஸ்களாக பதிவிட முடியும்.
முன்னதாக இந்த வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்த போது 90 விநாடிகள் முதல் மூன்று நிமிடங்கள் வரை வீடியோ ஸ்டேடஸ் வைக்கும் வசதி வழங்கப்பட்டிருந்தது. பின்னர் அது 30 விநாடிகளாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா நிவாரண நிதி - ரூ. 1 கோடி அளித்த சீன ஸ்மார்ட்போன் நிறுவனம்!