ஹைதராபாத்: பயனர்களின் எதிர்ப்புகளையும் மீறி பேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையை அமல்படுத்தியுள்ளது. தனியுரிமை கொள்கையை ஏற்காத பயனர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வசதிகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலகளவில் 90களை அடுத்துள்ள கைபேசி பயனர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது குறுந்தகவல் மட்டும் தான். வரையறுக்கப்பட்ட வரம்பை உடைய இந்த குறுந்தகவல், தகவல்களைப் பகிருதல், உணர்வுகள் வெளிப்படுத்துதல் எனப் பல பரிணாமங்களில் பயணித்தது.
தொழில்நுட்பமும், இணைய வேகமும் ஒருசேர்ந்து வளர, குறுந்தகவலின் பயன்பாடும் படிப்படியாகக் குறைந்தது. அதற்கு மாற்றாக இணையதள வசதியுடன் இயங்கும் பல செயலிகள் களம் கண்டாலும், நிலைத்து நின்றது வாட்ஸ்அப் என்றே கூறலாம்.
பயனர்களைத் தன்வசப்படுத்திய வாட்ஸ்அப்
மேகக் கணினி அரங்கில் நண்பர்களுடன் அரட்டையடிப்பது, புகைக்கப்படங்கள், காணொலிகள், கோப்புகளைப் பகிர்வது, குழு அமைத்து காணொலி அழைப்புகள் மூலம் ஒன்றுகூடுவது எனப் பல அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் வாரி இறைத்தது. காலப்போக்கில் மக்களின் அத்தியாவசிய செயலிகளின் ஒன்றாக இடம்பிடித்த வாட்ஸ் அப், சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக்கிடம் கைமாறியது.
இதனையடுத்து, பல அம்சங்களை வாட்ஸ் செயலியில் பேஸ்புக் நிறுவனம் புகுத்தியது. மிக முக்கியமாக வாட்ஸ்அப் மூலம் பகிரப்படும் தகவல்கள், செய்யப்படும் அழைப்புகள் அனைத்தும் பாதுகாப்பானவை என நிறுவனம் கூக்குரலிட்டு பயனர்களை தன் வசம் பிணைத்து வைத்திருந்தது.
சிக்கல் ஏற்படுத்திய புதிய தனியுரிமை கொள்கை
இச்சூழலில் தான் வாட்ஸ்அப் செயலியின் தனியுரிமை கொள்கையில் மாற்றம் செய்யப்போவதாக அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் அறிவித்தது. அதன்படி, புதிய பதிப்பைத் தரவிறக்கம் செய்யும் பயனர்களிடம் தங்களின் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்தியது. இதற்கான காலக்கெடு பிப்ரவரி 2021ஆக நிறுவனம் நிர்ணயித்திருந்தது.
இதனைச் சற்றும் எதிர்பாராத பயனர்கள், கடும் எதிர்ப்புகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். ஆம், வாட்ஸ்அப் கூற்றுப்படி, பயனர்களின் எந்த தகவல்களையும் அவர்கள் பயன்படுத்துவதில்லை, பயனர்கள் பகிரும் தகவல்கள் சேமித்து வைக்கப்படுவதுமில்லை. ஆனால், புதிய தனியுரிமை கொள்கையில் இவை அனைத்தும் மாற்றப்பட்டிருந்தது.
அதாவது, பயனர்களின் தகவல்கள், தரவுகள் என அவர்கள் தனியுரிமை சார்ந்த விவரங்கள் யாரும் அணுகாதவாறு பாதுகாப்பாக இருக்கும். ஆனால், பேஸ்புக்கின் கீழ் இயங்கும் செயலிகள் அனைத்தும் பயனர்களின் தகவல்களை விளம்பர நோக்கத்திற்காகப் பயன்படுத்தும் என்று புதிய தனியுரிமை கொள்கையை வகுத்துள்ளது வாட்ஸ்அப்.
வாட்ஸ்அப்பின் சப்பை கட்டு
இது குறித்து சர்ச்சைகள் வெடித்தபோதும், வாட்ஸ்அப் தங்கள் தரப்பு வாதமாக, பயனர்களின் தகவல்கள் அனைத்து பாதுகாப்பானதாகவே இருக்கும் என்றும், பயனர்களின் தகவல்களை நாங்கள் கூட அணுகமுடியாது என சப்பைக்கட்டுக்கட்டி வருகிறது.
இதற்கிடையில், வாட்ஸ்அப்பின் இந்த முடிவை அடுத்துப் பல தரப்பினரும் அதற்குப் போட்டியாகவுள்ள 'சிக்னல்' செயலியை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவரான எலான் மஸ்க்கும் 'சிக்னல்' செயலிக்கு ஆதரவாக ட்விட் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து பெருமளவில் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
புதிய தனியுரிமை கொள்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள்
- வாட்ஸ்அப் சேவைகள் மற்றும் தரவு செயல்பாடு
- வாட்ஸ்அப் பயனர் தகவல்களை, தாய் நிறுவனமான பேஸ்புக் கையாளும் விதம்
- பேஸ்புக் உடன் இணைந்து பயனர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் மற்றும் சேவைகள்
புதிய தனியுரிமை கொள்கையில் இருக்கும் ஆபத்துகள்
- பயனர்களின் இருப்பிடம், கைபேசி ரகம் உள்ளிட்ட பிரதான தகவல்களை வாட்ஸ்அப் சேமிக்கும்
- பயனர்கள் பகிரும் தகவல்கள் சேமிக்கப்பட்டு, அதற்கேற்றாற்போல விளம்பரங்கள் உட்செலுத்தப்படும்
- பயனர்களின் நகர்வுகளைக் கணித்து சலுகைகள் அறிவிக்கப்படும்
- மொத்தமாகப் பயனர்களின் தனியுரிமை தகவல்கள் அனைத்து கண்காணிக்கப்படும்
மாற்று செயலிகள்
- சிக்னல்
- டெலிகிராம்
வாட்ஸ்அப் செயலியிலிருந்து முற்றிலுமாக வெளியேற
- முதலில் -> 'அமைப்புகள் (SETTINGS)' செல்லவும்
- அங்கு -> 'கணக்கு (ACCOUNT)' எனும் விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்
- பின் -> 'தனியுரிமை (PRIVACY)'ஐ சொடுக்கவும்
- அதில் -> 'என் கணக்கை அழி(DELETE MY ACCOUNT)'ஐ தேர்ந்தெடுங்கள்
- அங்கு உங்களின் வாட்ஸ்அப் எண்ணை உள்ளீடு செய்து, கணக்கை முற்றிலுமாக அழித்து விடுங்கள்