உலகின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்பிளிக்ஸ், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் சந்தையின் பெரும் பகுதியை பிடித்திருந்தாலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடிவருகிறது.
இந்நிலையில், இந்தியர்களை கவரும் வகையில் நெட்பிளிக்ஸ் தளம் பல்வேறு புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, தனது இன்டர்பேஸை (interface) தற்போது இந்தியில் நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியர்களை ஈர்க்க முடியும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய வசதி குறித்து நெட்பிளிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் உள்ளடக்க பிரிவின் துணை தலைவர் மோனிகா ஷெர்கில் கூறுகையில், "பயனாளர்கலுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்க உள்ளடக்கம் எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு இதை உபயோகிக்கும்போது கிடைக்கும் அனுபவமும் முக்கியம். இந்த புதிய இன்டர்பேஸ் பயனாளர்களுக்கு புதியதொரு அனுபவத்தை அளிக்கும். இந்தியை விரும்பும் பயனாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.