சென்னை: பிரதமரின் ஆத்மநிர்பார் திட்டம் மூலம் தற்சார்பு இந்தியாவைக் கட்டமைக்க இந்திய தயாரிப்புகளை ஊக்குவிப்பதில் அரசு முனைப்புக் காட்டி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் தனது மன்-கி-பாத் உரையில் கூ செயலி குறித்து பாராட்டு தெரிவித்து இருந்தார். இந்திய பயனாளர்களைக் கவரும் வகையில் இந்திய மொழிகள் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள இத்தளத்தில் பெரும்பாலும் பாஜக-வினரும், வலதுசாரி ஆதரவாளர்களும் இணைந்துள்ளனர்.
மேலும், இந்த செயலியை தரவிறக்கம் செய்த பயனர்கள் சிலர், இச்செயலியை நிறுவிய உடன் தங்கள் அனுமதியின்றி, தானாகவே ‘கூ’ செயலியின் அதிகாரப்பூர்வப் பக்கத்தை பின் தொடர்வதாக புகார்கள் தெரிவித்துள்ளனர். ட்விட்டர் பக்கத்தில் கூட, அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தை நம் அனுமதியின்றி பின் தொடர வைக்க இயலாது. அந்த வகையில் இங்குப் பயனரின் தனியுரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
‘கூ’ செயலிக்கு மாறும் அமைச்சகங்கள், பிரபலங்கள் பின்னணி என்ன?
விவசாயிகள் போராட்டம் தொடர்பான கருத்துகளை பகிர்ந்த முக்கிய கணக்குகளை முடக்க மைக்ரோ ப்ளாகிங் தளமான ட்விட்டருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பதிவிட்ட ட்வீட்டுகளையும், விவசாயிகளைப் போராட்டத்திற்குத் தூண்டும் ட்விட்டர் கணக்குகளையும் நீக்க மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. ட்விட்டர் நிறுவனம் அரசு தரப்பை சந்தித்து விளக்கம் அளிக்க முயன்ற நிலையில், மத்திய தகவல் அமைச்சகம் சந்திக்க மறுத்து விட்டது.
ட்விட்டர் நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் வெளிப்படைத் தன்மையோடு நடுநிலையாக செயல்படுவதே நோக்கம் எனவும், முழு பேச்சு சுதந்திரம் அளிப்பதால் உடனடியாக முழுவதையும் முடக்க முடியாது எனவும் விளக்கமளித்துள்ளது.
அரசின் உத்தரவுப்படி கணக்குகளை ட்விட்டர் நீக்க மறுத்து விளக்கம் கொடுத்ததால் அதிருப்தியடைந்த மத்திய அரசு, தன் அலுவலர்கள், அமைச்சகர்களை ‘கூ’ செயலியை உபயோகிக்க ரகசிய உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அரசு தொடர்பான அமைச்சகங்கள், அலுவலர்கள் அனைவரும் ‘கூ’ செயலியைப் பயன்படுத்தத் தொடங்கினர். எனினும், ட்விட்டரில் இருந்தும் இந்த கணக்குகள் வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரை பாதிக்குமா ‘கூ’ வின் வருகை
ட்விட்டர் தளத்தில் உலகம் முழுவதிலும் இருந்து பல பில்லியன் பயனாளர்கள் உள்ளனர். ‘கூ’ செயலி இந்தியாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ந்து வருகிறது. ட்விட்டர் நிறுவனம் தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்தல், செயற்கை நுண்ணறிதல் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை உபயோகித்து வருவதால், அதனுடன் ‘கூ’ ஈடு கொடுப்பதென்பது சவாலான ஒன்றாகக் கருதப்படுகிறது.