கரோனா பொது முடக்கத்தால் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு அதிகப்படியான மக்கள், கூகுள் மீட், கூகுள் கிளாஸ் ரூம், ஜி சூட் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, ஆன்லைன் கல்வி பயனர்களை கவர்வதற்காக கூகுள் நிறுவனம், தனது செயலிகளில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் ’தி எனிவேர் ஸ்கூல்’ திட்டம் - புதிய அம்சங்கள் அறிமுகம்!
உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் ஆன்லைன் கல்வி பக்கம் திரும்பியுள்ள காரணத்தினால், 'The Anywhere school' திட்டத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கூகுள் கல்வி துணை இயக்குநர் அவ்னி ஷா கூறுகையில், "வரும் மாதங்களில் கல்வி வாடிக்கையாளர்களுக்காக ஜி சூட் செயலியில் கேள்வி - பதில் வசதியும், வாக்கு சேகரிக்கும் வசதியும் அறிமுகம் செய்யவுள்ளோம். இதுமட்டுமின்றி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு பாடத்திட்டத்தை பதிவு செய்து வைத்துக்கொள்ளும் தற்காலிக அம்சமும் வரவுள்ளது. ஆசிரியர்கள் லிங்க்கை அனுப்பி மாணவர்களை வகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம். விரைவில் 10 கூடுதல் மொழிகளுடன் 56 மொழிகளில் வகுப்பறைகள் செயல்படலாம்" என்றார்
மேலும் அவர் கூறுகையில், "வகுப்பு அல்லாத மாணவர்களின் நலனுக்காக learning management system (LMS) என்ற புதிய தயாரிப்பையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், மாணவர்கள் எளிமையான முறையில் தங்களது பணிகளை மேற்கொள்ளலாம். வகுப்பறையில் தங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பெற்றோர்கள் புரிந்துகொள்ளும் அம்சமும் உள்ளது. ஆசிரியர்கள் குறிப்பிட்ட வகுப்பு பாடத்தின் நகல்களை உருவாக்கி ஒவ்வொரு மாணவரின் கூகுள் டிரைவுக்கும் விநியோகிக்க முடியும். அதேபோல், ஸ்மார்ட் கம்போஸ் மற்றும் ஆட்டோ கரெக்ட் வசதி ஆசிரியர்கள், மாணவர்கள் விரைவாக எழுதுவதற்கு உதவுகிறது. அவை மீண்டும் மீண்டும் ஒரே வார்த்தைகளை எழுதும்போது ஏற்படும் எழுத்துப்பிழை, இலக்கணப் பிழைகள் தானாகவே சரிசெய்யும் தன்மை கொண்டது" என்றார்.