உலகின் அதிக பயனர்களைக் கொண்ட சமூக வலைதளமான பேஸ்புக்கில் சிலர் ஆபாசமான பதிவுகளையும், வன்முறையை ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய தவறான பதிவுகளைக் கண்டறிய பேஸ்புக் நிறுவனம் உபயோகிக்கும்AI வசதி குறித்து இங்கு பார்க்கலாம்.
தவறான பதிவுகளைக் கண்டறிய AI வசதியைப் பயன்படுத்தும் பேஸ்புக்! - பேஸ்புக் நிறுவனம்
பேஸ்புக் நிறுவனம் தவறான பதிவுகளைக் கண்டறிய ப்ரோ ஆக்டிவ் டிடக்ஷன் (Proactive Detection), ஆட்டோமேஷன், முன்னுரிமை (Prioritisation) ஆகிய மூன்று வழிகளைப் பின்பற்றுகிறது.
இந்த AI வசதியானது மூன்று வழிகளைப் பின்பற்றி இயங்கி வருகிறது. முதலாவதாக ப்ரோ ஆக்டிவ் டிடக்ஷன். இது பயனர்கள் புகார் செய்யும் பதிவுகள் மட்டுமின்றி அனைத்து பதிவுகளையும் ஸ்கேன் செய்து தவறைக் கண்டறியும் தன்மை கொண்டது. இரண்டாவதாக, ஆட்டோமேஷன் என்பது சில பதிவுகள் தவறானவை என்பதை AI தொழில்நுட்பம் தானாகவே முடிவெடுத்து நீக்கி விடும். இறுதியாக முன்னுரிமை (Prioritisation) வழி பின்பற்றப்படுகிறது. அவை பேஸ்புக்கில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும் அல்லது அதன் செயல்திறன்மிக்க அமைப்புகளால் கண்டறியப்பட்டாலும், மதிப்பாய்வு செய்யப்பட வேண்டிய மிக முக்கியமான பதிவுகளுக்கே AI முன்னுரிமை அளிக்கிறது. இந்த மூன்று வழிகளைப் பின்பற்றி தான் இணையத்தில் பதிவேற்றப்பட்ட தவறான பதிவுகள் சில மணி நேரங்களிலேயே நீக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இதுகுறித்து பேசிய பேஸ்புக்கின் தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் ஜெஃப் கிங், "இந்தத் தொழில்நுட்பம் கரோனா காலக்கட்டத்தில் தவறான மற்றும் போலியான பதிவுகளைக் கண்டறிய மிகவும் உபயோகமாக இருந்தது" எனத் தெரிவித்தார்.