டெல்லி: பேஸ்புக் நிறுவனம் தங்களின் தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் லைவ்ரூம் என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என கோடிக்கணக்கானோர் தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள், கருத்துகளை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகின்றனர்.
பெரும்பாலும் பிரபலங்கள் அனைவரும் இன்ஸ்டாகிராமில் தங்களை ஆக்டிவ்வாக வைத்துக்கொள்ளவே விரும்புகின்றனர். அதற்கு தகுந்தாற்போல இன்ஸ்டாகிராம் பல்வேறு சிறப்பம்சங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
முன்னதாக இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டபோது, இன்ஸ்டாகிராம் அதன் பயனாளர்களுக்காக டிக்டாக் போன்ற புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது.
அதுமட்டுமின்றி, தனிப்பட்ட குறுஞ்செய்திகளை அழிக்கும் வசதி, ரகசிய உரையாடல்களை அழிக்கும் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் வசதி உள்ளிட்ட பல அம்சங்களை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், தற்போது ஒருசமயத்தில் ஒரு நபருடன் மட்டுமே நேரலையில் உரையாடும் வகையில் இருந்த வசதியை மாற்றியமைத்து ஒரே சமயத்தில் பயனாளர் உட்பட நான்கு பேருடன் பேசும் வசதியை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இந்த வசதிக்கு இன்ஸ்டாகிராம் லைவ்ரூம் எனப் பெயரிட்டுள்ளது. இந்த வசதி இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களுடன் கலந்துரையாடுவதற்கும், தொழிலாளர்கள் தங்களது சந்தைகளை வாடிக்கையாளர்களிடம் விரிவுபடுத்துவதற்கும் ஏதுவாக அமையும் என நம்புவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் மாதங்களில் பயனாளர் கட்டுப்பாடுகள் மற்றும் ஆடியோ தொடர்பான கூடுதல் அம்சங்களும் கிடைக்கப்பெறுவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த வசதியில் பயனாளர்கள் லைவ் ரூம் ஆப்சனை கிளிக் செய்து, லைவ் கேமிரா ஆப்சனை தேர்ந்தெடுக்கவேண்டும். பின்னர், தாங்கள் யாருடன் நேரலையில் கலந்துரையாடவேண்டுமோ அவர்களை இணைத்துக்கொள்ளலாம். இன்ஸ்டாகிராமின் இந்த வசதி இளைய தலைமுறை பலரையும் வெகுவாக ஈர்க்கும் என நம்பப்படுகிறது.