PUBG எனப்படும் பிளேயர் அன்நோன்ஸ் பேட்டில்கிரவுண்ட்ஸ் உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஆன்லைன் கேம் ஆகும். இதன் இந்திய வெர்சனான பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா (Battlegrounds Mobile India) நாளை (ஜூன் 18) இந்தியாவில் வெளியாகவுள்ளது. ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்களுக்கு இதற்கான முன்பதிவு மே 18ஆம் தேதி தொடங்கியது. பப்ஜி மீது ஆர்வம் கொண்டவர்கள் மத்தியில் இந்த கேம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இதற்கு எதிர்ப்பும் நிலவுகிறது.
சீனா - இந்தியா இடையேயான மோதல் போக்கு காரணமாகவும், தேசிய பாதுகாப்பு, தனிநபர் உரிமை ஆகியவற்றை கணக்கில் கொண்டும் பப்ஜி உள்ளிட்ட சில அப்ளிகேசன்களை கடந்த ஆண்டு இந்திய அரசு தடை செய்தது. அதுமட்டுமல்லாது சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருப்பதாகவும் கூறப்பட்டது.
சீனாவின் பெஹமோத் டென்செட்டின் கீழ் செயல்படும் கிராப்டான் எனும் தென்கொரிய நிறுவனத்தால் இந்த கேம் தயாரிக்கப்பட்டது. தற்போது அதே நிறுவனம்தான் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா எனும் பெயரில் உள்ளே நுழைகிறது. இந்த கேம் நாளை இந்தியாவில் வெளியாகவுள்ள நிலையில், இதற்கு எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு வல்லுநர் கௌரவ் தியாகி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுகுறித்த தகவலை சேகரித்துள்ளார். அதனடிப்படையில் இந்த கேம் எந்த அனுமதியும் பெறாமல் இந்தியாவுக்குள் நுழைய இருப்பது தெரிய வந்துள்ளது.