உலகெங்கும் தற்போது கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் தொற்று காரணமாக மக்களிடையே தேவையற்ற பீதியும் அதிகரித்துவருகிறது. சாதாரண சளி, காய்சல் வந்தால்கூட தங்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் மருத்துவமனையை நோக்கிப் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் மருத்துவமனைகளிலும் தேவையற்ற கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தனது பயனாளர்களுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய உதவும் வகையில் ஒரு அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் தனது சிரி மென்பொருளுக்கு வழங்கியுள்ளது.
சிரி எவ்வாறு இயங்குகிறது?
- சிரி முதலில் தனது பயனாளர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளதா என்பது போன்ற அடிப்படை கேள்விகளைக் கேட்கிறது.
- இதற்கு பயனாளர்கள் ஆம் என்று பதில் சொன்னால், அமெரிக்காவின் அவசர உதவி எண் 911க்கு அழைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
- கோவிட்-19 வைரஸ் அறிகுறிகள் இல்லை என்று கூறினால், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தீர்களா என்ற கேள்வி கேட்கப்படுகிறது.
- அதற்கு பயனாளர்கள் அளிக்கும் பதிலைத் பொறுத்து தனிமைப்படுத்தவோ அல்லது மருத்துவர்களை நாடவோ சிரி பரிந்துரைசெய்கிறது.
- 65 வயதுக்கு மேலான மூத்த குடிமக்களுக்கு இந்த வைரஸ் தொற்று அறிகுறிகள் இருக்குமானால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற அறிவுறுத்துகிறது.
- நிலைமை மோசமாக இல்லை என்றால் கோவிட்-19 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதிகார்பூர்வ பக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.
சிரியின் இந்த வசதிகள் தற்போது அமெரிக்காவுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த வசதியை மற்ற நாடுகளுக்கு வழங்குமா என்பது குறித்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: சவுதி அரேபியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்!