கோடை விடுமுறை துவங்கும் நிலையில், சுற்றுலாத் திட்டங்கள் மனதில் அலைமோத தொடங்கியிருக்கும். இங்க போகலாம் அங்க போகலாம் என்று மாதக்கணக்கில் திட்டமிடும் நாம், பேக்கிங்கில் அடிப்படையான சிலவற்றை மறப்பதும் உண்டு.
அப்படி, பயணம் மேற்கொள்ளும்போது எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள், பின்பற்ற வேண்டிய சில பாதுகாப்பு வழிமுறைகளாக பயண நிபுணர்கள் கூறும் சிலவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.
வழிகாட்டி:
உலகம் முழுவதும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு புதிதாக ஒருவர் செல்ல விரும்பும்பொழுது அவருக்கு கை கொடுக்கும் சாதனம் கூகுள் மேப்ஸ். செல்போன் இருந்தா போதுமே என்று நினைப்பவர்கள் எவ்வளவு நேரம் சார்ஜ் நிற்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். போகும் இடத்தின் மேப்பும் நிச்சயம் உதவும்.
உணவு:
நெடுந்தூர பயணத்தின்போது, சாலையோர கடைகளில் உணவு உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. எண்ணெய் சேர்த்த, வறுத்த உணவுகளை எடுத்துக் கொண்டால் நீர்ச்சத்து குறைபாடு உண்டாவதுடன் வாயு தொல்லையும் இருக்கும். அதற்கு பதில் தர்பூசணி, நுங்கு, இளநீர் போன்ற நீர்ச்சத்துள்ளவற்றை உண்பது நல்லது. உங்களுக்கு பிடித்தமான பானத்தை எடுத்துச் செல்வது நல்லது.